ஸ்பெயின் நாட்டின் கனெரித் தீவுகளில் (Canary Island) வெடித்துள்ள எரிமலை உமிழ்கின்ற மாசு கலந்த புகை மண்டலம் பிரான்ஸின் வான்பரப்பை நோக்கி நகர்ந்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கனெரி தீவுக் கூட்டங்களில் ஒன்றான La Palm தீவில் உள்ள கும்ப்ரே வீஜாஎரிமலை (Cumbre Vieja volcano) கடந்த சிலதினங்களாக வெடித்து தீப்பிளம்புகளையும் புகை மண்டலங்களையும் உமிழ்ந்துவருகிறது.
அயல் இடங்களில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். கரும் புகை மூட்டம் அந்தப் பகுதிகளை மூடிமறைத்துள்ளது. ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கு மேலே திரண்டுள்ள மாசு மண்டலம் அங்கிருந்து நகர்ந்து-பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து-பிரான்ஸ் வான்பரப்பை நோக்கி வருகிறது.
பெருமளவு சல்பர் டயோக்சைட் (sulfur dioxide-SO2) கலந்த புகை மண்டலம் வளியோடு கலந்து வார இறுதியில் நாட்டின் வான்பரப்பினுள் பிரவேசிக்கத்தொடங்கும் என்றும், அதனால் பல பகுதிகளில் அமில மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளி மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார நலன்களை அவதானிக்கின்ற ‘கோப்பர்நிக்கஸ்’ கண்காணிப்புச் சேவை நிலையத்தின் கருவிகளது (Copernicus monitoring devices) அளவீடுகள் மூலம்இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனெரித் தீவுகளின் எரிமலை நிலையம் (Canary Islands Volcanological Institute) வெளியிட்டிருக்கின்ற கணிப்புகளின்படி, தீப்பிளம்புகளைக் கக்குகின்ற எரி மலைகளில் இருந்து நாளாந்தம் 6ஆயி ரம் முதல்,11,500 வரையான தொன் கந்தக டயோக்சைட் வளி மண்டலத்தைநோக்கி உமிழப்படுவது தெரியவந்துள்ளது.பொதுவாக எரிமலைகள் காபன் (CO2) சல்பர் டயோக்சைட்(sulfur dioxide,) ஹைட்ரஜன் சல்பைட்(hydrogen sulfide) மற்றும் ஹைட்ரஜன் ஹலைடுகளை(hydrogen halides) வெளியேற்றுகின்றன.
வளியில் இவற்றின் செறிவைப் பொறுத்து அவை மனிதர்கள், விலங்குகள்மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வார இறுதியில் பிரான்ஸின் சிலபகுதிகளில் இடி மின்னல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் மழைநீரில் சல்பூரிக் அமிலத்தின் செறிவு அதிகமாகஇருக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எரிமலை கக்குகின்ற புகை மூட்டம் பல்லாயிரக் கணக்கான மைல்கள் கடந்துபரவுவது இது முதல் முறை அல்ல. 2010ஆம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் உள்ள Eyjafjöll எரிமலை வெளியேற்றிய புகைமண்டலம் சில தினங்கள் ஜரோப்பிய வான் பரப்பை மூடி மறைத்திருந்தது.
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.24-09-2021