யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும் , அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும் , பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இராச வீதி மாசுவன் சந்தி , நீர்வேலி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருக்கும் ஆடுகள் , மாடுகள் என்பவற்றை அடைக்கப்பட்ட “பட்டா” ரக வாகனங்களில் வரும் நபர்கள் கடத்தி செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை வீடுகளில் கூடுகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கோழிகள் கூட திருடப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை நீர்வேலி வடக்கில் 03 மாடுகள் கடத்தி செல்லப்பட்டுள்ளன. இவ்வாறாக தொடர்ச்சியாக கால் நடைகள் கடத்தப்படுவதனால் , தாம் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதுடன் , வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதனால் உரிய தரப்பினர் கால் நடை கடத்தல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை யாழில் இருந்து “பட்டா” ரக வாகனத்தில் இரண்டு மாடுகளை கடத்தி சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்டவர்கள் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.