யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன் போது , மாநகர சபை உறுப்பினர் வ. பார்தீபன் “மாநகர சபை எல்லைக்குள் அனுமதி இன்றி சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை நிலையங்கள் பல இயங்கி வருகின்றன அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ” என கோரி பிரேரணையை சபையில் முன் வைத்தார்.
அதனை சபை ஏக மனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு திறக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் இயல்வு நிலைக்கு திரும்பிய பின்னர் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை , சுத்திகரிக்கப்பட்ட நீரினை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் , எந்தவிதமான அனுமதியையும் பெறாதே நீரினை விற்பனை செய்து வருகின்றனர். அந்த நீரின் தரம் குறித்து எவராலும் சான்று வழங்கப்படுவதில்லை. அத்துடன் நீரில் உள்ள கனியுப்புக்கள் வடிகட்ட படுவதனால் கனியுப்புக்கள் அற்ற நீரே விற்பனை செய்யப்படுகிறது
யாழ்.மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் நிலத்தடி நீர் ஆதாரமே உண்டு. அனுமதியின்றி இயங்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒரு லீட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரினை பெறுவதற்காக சுமார் 4 லீட்டர் நீரினை விரயம் செய்கின்றனர்.
விரயமாகும் நீரினை வீண் விரயமாகாது தடுப்பதாக கூறி பலர் மீண்டும் கிணற்றுக்குள் அந்நீரினை விடுகின்றனர். அது மிகவும் ஆபத்தானது
ஏனெனில் மழை பெய்து நிலத்தில் தேங்கும் நீர் கற்பாறைகள் ஊடாக வடிகட்டப்பட்டு நிலத்தடி நீருடன் கலக்கின்றன. ஆனால் இவர்கள் நீர் சுத்திகரிப்புக்கு எடுத்த நீரில் விரயமாகும் நீரினை மீள கிணற்றுக்குள் விடுவதனால் , அது கிணற்று நீரினை மாசுபடுத்துவதுடன் நிலத்தடி நீர் நிலைகளையும் மாசு படுத்துகின்றன.
இதனால் யாழ்ப்பாணம் குடிநீருக்கு பாரிய ஆபத்தினை எதிர்நோக்கும் அபாயம் காணப்பட்டது.
இவ்வாறாக பல தரப்பினராலும் குடிநீர் விற்பனை நிலையங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் யாழ். மாநகர சபையில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.