பொது இடங்களுக்குச் சென்றுவரும், உலாவும் நபர்கள், கொரோனா தடுப்பூசியில் இரண்டு
டோஸ்களையும் பெற்றிருக்க வேண்டுமென்பது இன்னுமே சட்டமாக்கப்படவில்லை. என்றாலும்
அதுதொடர்பில், எதிர்காலத்தில் முறையாக சோதனைச் செய்யப்படும் என, கொவிட்-19
செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 72 ஆவது நிறைவையொட்டி, இராணுவ படையணிகளின் 24
கொடிகளும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறிய குழுவினரைத் தவிர, ஏனையோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ள. பொது இடங்களுக்குச் சென்றுவருபவர்கள், இவ்விரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டிருப்பது உகந்தது.
12-19 வயதுகளுக்கு இடைப்பட்ட, பல்வேறான நோய்களுக்கு உட்பட்டிருக்கும், சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாடு திறக்கப்படுமாயின், இரவு 10 மணிமுதல் அதிகாலை
4 மணிவரையிலும் தனிமைப்படுத்த ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இதுதொடர்பில் பல மட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் . அத்துடன் நாட்டை திறந்தால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான அறிவுரைகளை தயாரித்துக்கொள்ளுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்துக்கும், போக்குவரத்து துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.