‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற திருமூலரின் வாசகத்திற்கு ஒப்பாய் ஒரு வாசகம் உண்டெனில் அது ‘இசையால் வசமாகா இதயம் ஏது’ என்ற வாசகத்தை கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், இந்த உலகமானது இசைமயமானது. இறைவனைப் போலவே இசையும் எங்கும் எதிலும் நிறைந்துள்ளது. இறைவனின்றி எதுவும் அசையாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோலவே, இன்று இசையின்றியும் எதுவும் அசையாது என்ற நிலை உருவாகியுள்ளது எனலாம். இசை தரும் இன்பத்தை அனுபவிக்காதவர்கள் எவரும் இருந்திடமாட்டார்கள். காரணம், அது மனிதர்களை மட்டுமல்லாது, எல்லா உயிர்களையும் ஈர்க்க வல்லது. அனைவரையும் இசைய வைப்பதால் தான் அது ‘இசை’ என கூறப்படுகிறது.
மொழி புரியாவிட்டாலும் மனிதனை கட்டிப்போடவும் கட்டவிழ்க்க கூடியதுமான ஆற்றலை பெற்றது இந்த இசை. அதனால் தான், இசை என்பது உலக மொழியாக காணப்படுகிறது. ‘சொற்களால் விவரிக்க முடியாத, மனதால் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மொழிதான் இசை. அது கேட்பவர் மனதில் சீரான துடிப்பை ஏற்படுத்தக்கூடிய காலங் கடந்த ஆழம் காண முடியாத தீர்க்கமான கலை’ என க்ளாடிலெவி எனும் பிரெஞ்சு மானிடவியலாளர் இசை பற்றி கூறுவதையும் காணலாம்.
அந்தவகையில், இலங்கையில் வாழும் மக்களின் இசை முயற்சிகள் என்பன அவற்றையும் கடந்து அவர்களின் வாழ்வின் பல அம்சங்களோடு கலந்தவை. அவர்களின் தெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்கு பாடல்கள் அவற்றில் மூத்தவை எனலாம். அது மட்டுமல்லாது, தமிழர்களின் நாட்டார் இசையும், கூத்தின் இசையும், சிங்கள மக்களின் இசை வடிவங்களும் ஆதிக்குடிகளான வேடர்களின் இசையும், இலங்கையின் இசையின் வேர்களாக கருதப்படுகின்றன.
அதன்படி, உள்ளூர் இசை வடிவங்களை பற்றி நோக்கும் போது, அவை மக்களின் வாழ்வியலோடு தொடர்புபட்ட வகையிலும் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்கள் பாடிய, பாடும் பாடல்களின் மூலம் வெளிப்படுவதை காணலாம். அதாவது, உள்ளூர் சடங்குகளிலும் வாழ்வியல் தேவைகளிலும் இசை என்பது அவர்களோடு ஒன்றிப் போனதாக காணப்படுகிறது. அன்று முதல் இன்று வரை மக்களின் வாழ்க்கையே இசைமயமானது தான். குழந்தை பிறந்ததிலிருந்து பாடப்படும் தாலாட்டு பாடல்களில் தொடங்கி இறக்கும் போது பாடப்படும் ஒப்பாரி பாடல்கள் வரையிலும் இதற்கிடையில் பொழுது போக்காகவும் விளையாட்டுக்களின் போதும் தொழில் புரியும் போதும் பாடப்படும் பாடல்கள் என பல வகையில் பாடல்கள் பாடப்படுகின்றன. மேலும், சடங்குகளின் போது காவியம்,சிந்து,அம்மானை,குளிர்த்தி பாடல்கள் போன்ற இசை வடிவங்களும் இடம் பெறுகின்றன. இவை வழிவழியாக நம் மத்தியில் நிலவி வருகின்றன.
தெய்வ வழிபாடுகளின் போது இசைக்கப்பட்ட இந்த இசைவடிவங்கள் காலபோக்கில் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளையும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அவலங்களையும் அவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்காக கையாளப்பட்டு அந்த நடைமுறை இன்றளவும் சமூகத்தில் நிலவுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதாவது, உள்ளூர் புலவர்களால் சமகால பிரச்சினைகளை பாடும் ஊடகமாக இந்த இசைவடிவங்கள் உருப்பெற்றும் வலுப்பெற்றும் வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. பாடல் வரிகளில் உள்ள கருத்தும் நம்பிக்கையும் இசைவடிவோடு வரும் போது நல்ல குணம் கிடைக்கிறது. அதை உள்ளூர் புலவர்கள் சாதகமாக பயன்படுத்தி தம் கருத்துக்களை வேதனைகளை மக்கள் மத்தியில் பதிய வைக்கின்றனர். சொல்லிலும் செயலிலும் புரிந்து கொள்ள முடியாதவற்றை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இசையின் மூலம் புரிய வைப்பதென்பது சிறப்பான விடயம் என்பதை விட சிறப்பான சேவை என்றே கூறலாம்.
அந்தவகையில், உள்ளூர் இசை வடிவங்களில் ஒன்றான காவிய பாடல் மரபில் ‘மழைக்காவியம்’ என்ற ஒரு பாடல் வகையில் மழையை நம்பி பயிர் செய்கையில் ஈடுபட்டமக்கள் மழை இன்றி ஏற்பட்ட அவலத்தை பாடுவதாக மழைக்காவியங்கள் அமைந்துள்ளதைக் காணலாம். காவியங்களுடன் ஒப்பிடும் போது மழைக்காவியங்கள் சமூகநிலைத் தன்மையை அதிகம் கொண்டுள்ளது. மழை இன்மையால் பயிர்கள் வாடி அழிவதையும் அதனால் ஏற்பட்ட வேதனைகளையும் புலப்பட எடுத்துக் கூறுவதாக அவை அமைகிறது.
‘பணிவேன் உன் பொன்னடியைப் பத்தினி தாயே
பருவமழை பொழிய உன் திருமன மிரங்கும்
அநியாய மாய்ப்பயிர்கள் வாடுதே அம்மா..’ (மேற்கோள்: ஆறுமுகம்)
என தொடங்கும் பாடல் மழையின்றி பயிர்கள் வாடுவதன் வெளிப்பாடாக அமைவதை காணலாம். இவை காலப்போக்கில் முஸ்லிம் மக்கள் மத்தியில் மழைக்காவியங்கள் ஏற்பட வழிவகுத்தது.
சற்று எழுத்தறிவினை கொண்ட கிராமிய புலவர்கள் தமது கிராமங்களில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் அனர்த்தங்களையும் பாடுவதற்கு இந்த இசை வடிவங்களை கையாண்டனர். குறிப்பாக, காலத்திற்கு காலம் தமது பிரதேசங்களிலே ஏற்பட்ட அனர்த்தங்களை பற்றி பாடுவதற்கு காவிய வடிவத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். அந்தவகையில், சூறாவளி, சுனாமி, வெள்ளப்பெருக்கு அனர்த்தங்கள் பற்றி பாடப்பட்டுள்ளன. 1907ல் வீசிய புயல் பற்றிய சேகுமதார் புலவரின் புசற்காவியம், 1957 வெள்ளம் பற்றிய இப்ராஹீம் தாவுத்ஸா பாடிய வெள்ள வேதனைக் காவியம், மஹ்முது அப்புஸ்ஸமது பாடிய வெள்ளக்காவியம், 1978 சூறாவளி பற்றிய சீனிமுகம்மது அண்ணாவியாரின் சூறாவளி காவியம், மா.சிதம்பரபிள்ளையின் புயல் காவியம், நா.விநாயகமூர்த்தியின் புயல் காவியம், 2004ம் ஆண்டு சுனாமி பற்றிய இஸ்மாயிலின் சுனாமி கடல் கொந்தளிப்பு காவியம், வை.கணேசனின் ஆழிப்பேரலை அனர்த்த காவியம் என்பவை உள்ளூர் இசை வடிவங்களில் பாடப்பட்ட சமூக பிரச்சனை சார்ந்த பாடல்களாகும். இவற்றில், அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவுகளும் அவலங்களும் அதற்கு வழங்கப்பட்ட நிவாரணங்களுமே கருப்பொருளாக அமைந்திருக்கின்றன.
‘தஞ்சமென வீட்டைசிலர் நம்பியுள் இருக்க
சலார் என்றுவொரு சுவரது பறக்க அஞ்சியே..’ (விநாயகமூர்த்தி.நா,1978)
என்று புலவர் புயலின் போது ஏற்பட்ட அவலத்தை பற்றி பாடுகிறார். மேலும், சமூக பிரச்சனைகள் பற்றிய காவியங்களிலே போரின் அவலங்கள் பற்றிப் பாடப்பட்ட காவியங்களும் முக்கியமானவையாகும். கிராமிய புலவர்கள் தாம் அனுபவித்து வந்த போரின் அவலங்களை அவ்வப்போது காவியங்களாக எழுதி பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பாடியுள்ளனர். ‘வன்செயல் காவியம்’ 1980 களில் இருந்து தொடரும் யுத்தத்தினால் ஏற்பட்டுக் கொண்டிருந்த அழிவுகளையும் அவலங்களையும் பற்றி பேசுகிறது.
‘பட்டினித் தொல்லைகள் ஒரு புறம் வாட்ட
பட்டாள வீரர்கள் மறுபுறம் தாக்க
சுட்டபேர் பயங்கரவாதி யென்றோட
சுடுபட்டு மாண்டனர் அப்பாவி மக்கள்.’ (இப்ராஹீம்.ஏ.எஸ்,2006)
என்று போர் சூழலுக்குள் பட்டுழண்ட மக்களின் அவல வாழ்வை காட்டுகின்றார் புலவர்.
அமைதிக்கான எதிர்பார்க்கையும் ஏக்கமும் வன்செயல் காவியத்தின் இறுதிப்பகுதியில் உள்ள பாடல்களின் கருப்பொருளாகும். ‘கினாந்தி முனைக்காவியம்’ 2006ம் ஆண்டு மூதூரில் இருந்து முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறியதையும் இடம்பெயர்வின் போது எதிர் கொண்ட அவலங்களையும் கூறுவதாக அமைந்துள்ளது. உள்ளூர் இசை வடிவங்களில் பாடப்படும் இப்பாடல்கள் சமகால சமூக உணர்வோட்டத்தினையும் அதிகம் வெளிக்காட்டுகின்றன. கால மாற்றத்தால் மக்கள் எதிர் கொண்ட, எதிர் கொள்கின்ற சிக்கல்களை, பாதிக்கப்பட்ட மனநிலையின் வெளிப்பாட்டை இப்பாடல்களில் காணமுடிகிறது. குறிப்பாக, யுத்த காலத்தில் பாடப்பட்ட பாடல்கள் அப்போதைய அழிவுகளையும் மனநிலையையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வேண்டுதலையும் பரவலாக பாடின.
‘மாதாவே இன்றிங்கு மக்கள் படுதுன்பம்
வாயாலே சொல்லவே முடியாது அம்மா..’ (கந்தையா.ஏ,1992)
என்ற பேச்சியம்மன் காவியம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை பற்றி பாடுகிறது. இவற்றோடு, நீலாவாணனின் வேளாண்மை காவியமும் அடங்கும். மேலும், புலவர்கள் தனிப்பட்ட வாழ்விலே ஏற்பட்ட துயரங்களை பிரச்சனைகளை தன்னுணர்வு பாடல்களாக முறையிடுவதையும் காணலாம். இத்தகைய பாடல்களை மக்கள் கூடும் இடங்களில் பாடி காட்டியும் அதன் பிரதிகளை விற்பனையும் செய்துள்ளனர். கேதாரபிள்ளை என்ற சமுதாய கலைஞர் சிறையிலிருந்த போது, ‘சின்னக்குளத்து காளியம்மன் சிறைமீட்ட காவியம்’ என்ற காவியத்தை தான் சிறையில் அடையும் வேதனையை அம்மனிடம் முறையிடுமாறு பாடியுள்ளதை காணலாம். தனது வேதனை பற்றி பாடும் போது சமூக அநீதிக்கும் அதிகாரத்துவ செயற்பாடுகளும் எதிராக குரல் எழுப்பும் வகையில் உணர்வு பாடலாக வெளிப்படுவதை காணலாம்.
இவ்வாறாக, உள்ளூர் சடங்கு வடிவமாகிய காவியம் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை பற்றிப் பேசும், பாடும் வடிவமாக வளர்ந்துள்ளது. மழைக்காவியத்தில் தொடங்கி இன்று சமகால சமூக, அரசியல் பிரச்சினைகள் பற்றி பாடுகின்ற ‘காவிய கதை பாடல்’ என்ற மரபை உருவாக்கியுள்ளதையும் காணலாம். இது, பல்லவர் கால தேவாரங்கள் மக்களுக்கு விளங்கக்கூடிய விருத்தப்பாக்களிலும் விஜய நகர நாயக்கர் காலத்தில் பள்ளு, குறவஞ்சி போன்ற உள்ளூர் இசை வடிவங்களில் பாடல்கள் பாடப்பட்டதை போல பயன்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
மேலும், மலையக சூழலில் பெண்களின் விடுதலை வேட்கைக்கு வழிசெய்த மீனாட்சி அம்மாள் கும்மி, சிந்து போன்ற இசை வடிவங்களை கையாண்டு இலங்கைவாழ் இந்தியர்களின் மோசமான நிலைமையையும் உரிமைகளை நிலை நாட்டுவதற்கும் தானே பாடல்களை எழுதி பாடியும் உள்ளதை காணக் கூடியதாக உள்ளது. இவர் எழுதி பாடிய தொழிலாளர் சட்டக்கும்மி தொழிலாளர் நிலைமைகளை படம் பிடித்து காட்டுவதாக அமைகிறது.
‘சட்டமிருக்குது ஏட்டிலே – நம்முள்
சக்தியிருக்குது கூட்டிலே
பட்டமிருக்குது வஞ்சத்திலே வெள்ளை
பவர் உருகுது நெஞ்சத்திலே..’
என்று சட்டக்கும்மி அமைகிறது. தேயிலை தோட்டங்களில் மக்கள் படும் துயரங்களையும் பாட்டாக வடித்துள்ளதோடு அதற்கு எதிராக வெளியிட்டப்பட்ட இதழை மையப்படுத்தி மக்களை விழிப்படையச் செய்யும் விழிப்புணர்வு பாடல்களையும் பாடியுள்ளார்.
இவ்வாறாக, காலத்திற்கு காலம் உள்ளூர் இசை வடிவங்களில் சமகால பிரச்சினைகளை பாடி வந்த நிலை இன்றளவும் நடைமுறையில் உள்ளதை தற்போது சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை பற்றி பாடும் பாடல்கள் வாயிலாக அறியலாம். உதாரணமாக, கொரனா அவலங்களையும் இழப்புக்களையும் பற்றி மக்கள் அறிந்த இசைகளில் தற்போதைய சூழலில் பாடி வெளியிடுவதை கூறலாம். கல் மனதையும் கனிய வைக்கும் இசையை மக்களோடு இசைந்த இசை வடிவங்களில் சமகால புலவர்கள் சமூக, அரசியல் பிரச்சினைகளை பாடி தம் கருத்துக்களை வெளியிடுவதுடன் தம் இசையை இன்றும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
அன்னரெத்தினம் சகானாப்பிரியா,
இரண்டாம் வருடம்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்