காணாமல் போனதாகக் கூறப்படும் பிரதமரின் மகன் ரோஹித ராஜபக்ஸவின் (சிச்சி) செல்லப் பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஸ , தனது பேஸ்புக்கில், தனது செல்லப் பூனை காணாமல் போனதாக பதிவிட்டிருந்தார். பெத்தகானவில் உள்ள அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட இந்த அதிக மதிப்புள்ள பூனையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றும், அவஙர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன பூனை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ரோஹித ராஜபக்ஸ, தனது பேஸ்புக் கணக்கில் பதிவான குறிப்பை அகற்றிவிட்டார். அதற்கு பதிலாக, தனது செல்லப்பிராணியை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு, அனைவருக்கும் நன்றி கூறி, பதிவொன்றை இட்டுள்ளார்.
முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்த இந்த பூனை, துருக்கிய அங்கோரா இனத்தைச் சேர்ந்ததாகும். துருக்கிய அங்கோரா என்பது பழங்கால, இயற்கை பூனை இனமாகும், இது அப்போதைய மத்திய அனடோலியாவில் (இன்றைய துருக்கி, அங்காரா பகுதி) உருவானது.
இந்த பூனை இனம், 17ஆம் நூற்றாண்டு வரை வளர்க்கப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. இந்த இனப் பூனைகள் அங்கோரா அல்லது அங்காரா பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
துருக்கிய அங்கோரா பூனைகளின் விலை பொதுவாக 900 முதல்1500 டொலர் வரை இருக்கும். ஆனால் உயர் இனங்கள், நிலையான உடல் விகிதம், அழகான இனங்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட இனப்பெருக்க பண்ணைகளில் இருந்து வரும் துருக்கிய அங்கோரா பூனைகள், 1800 முதல் 3000 டொலர் வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.