இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர், சம்சேர்கன்ச் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பித்துள்ளது.
பவானிபூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி தமது பாஜக போட்டியாளரை விட முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைய தளத்தில் காலை 10.40 மணி அளவில் காணப்பட்ட தகவல்படி, மம்தா பானர்ஜி 5,333 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 2,956 வாக்குகளும், மூன்றாம் இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ் 132 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்றப் பொது தேர்தலில் தமது முன்னாள் தளபதியும் பிறகு பாஜகவுக்கு தாவியவருமான சுவேந்து அதிகாரியை எதிர்த்து, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் வெற்றியை தவறவிட்டார் மம்தா.
ஆனால், மம்தாவின் கட்சி மாநிலத்தில் அபார வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது. அதனால், சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாமல் முதல்வரானார் அவர்.
இந்நிலையில் முதல்வர் பதவியில் தொடர்வதற்கு அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவது அவசியம் என்ற நிலையில், தாம் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் மம்தா. அதன் அடிப்படையில் தற்போது மம்தா வெற்றியை நோக்கி முன்னேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.