பிரேசில் ஜனாதியும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமான உலகத் தலைவர்களில் ஒருவருமான சயீர் போல்சனாரூவுக்கு எதிராக அந்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று (ஒக்டோபர் 02, சனிக்கிழமை) 160க்கும் மேற்பட்ட நகரங்களில், அந்நாட்டின் ஜனாதி சயீர் போல்சனாரூ-வுக்கு எதிராகவும், அவரை பதவி நீக்க வலியுறுத்தியும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களை பிரேசில் எதிர்கட்சிகளும், வணிகர் சங்கங்களும் இணைந்து நடத்தின.
அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் சயீர் போல்சனாரோ தற்போது பின்தங்கியுள்ளார். பிரேசில் மக்களில் பலரும், ஜனாதி, கொரொனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சனையை சரியாக சமாளிக்கவில்லை என்கிற அதிருப்தியில் இருக்கின்றனர்.
பிரேசிலில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். “இந்த ஜனாதி உலகின் பிற்போக்குத்தனமான எல்லா விஷயங்களையும் பிரதிபலிக்கிறார். இங்கு பசி, வறுமை, ஊழல் என எல்லாமே இருக்கின்றன. நாங்கள் ஜனநாயகத்தைக் காக்க இங்கு கூடியுள்ளோம்” என போராட்டக்காரர்களில் ஒருவரான வால்டோ ஒலிவேரியா ஏ.எஃப்.பி செய்தி நிறுவத்திற்கு கூறியுள்ளார்.