Home இலங்கை தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் இரண்டாம் அறிக்கை!

தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் இரண்டாம் அறிக்கை!

by admin

Tamil Democracy Action Group 2nd Statement

ஊடக அறிக்கை

தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் கடந்த எட்டு நாட் செயற்பாட்டு அடைவுகள், மற்றும் பொதுத்தொடர்புச் சட்டத்தரணிகள் குழு நியமனம்

(மன்னார், திருகோணமலை 03 ஒக்ரோபர் 2021)

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தொருமித்து ஈழத்தமிழர் கூட்டுரிமைகளை உலக அரங்குக்கு முன்னெடுக்கத் தகுந்த அணுகுமுறையொன்றை, ஆராய்ந்து வகுக்கும் பணிக்கு, பரந்துபட்ட வரவேற்பும் பங்கேற்பும், செயற்பாட்டு முயற்சி அறிவிக்கப்பட்ட எட்டு நாட்களுக்குள் கிடைத்திருப்பது, வடக்கு-கிழக்கில் உள்ள வரலாற்றுத் தேவையை மட்டுமல்ல, மக்களின் ஆதங்கத்தையும் வேணவாவையும் வெளிப்படுத்துகின்றது.

முதலாவதாக, இந்த முயற்சியின் பிரதான இலக்கு, ஈழத்தமிழர்களின் தேசிய அரசியற் கூட்டுரிமைகளையும் கூட்டுக்கோரிக்கைகளையும் மக்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பங்குபெறு மக்களாட்சி முறையில், உரிய வெளிப்படைத்தன்மையோடு ஊடாடி, அவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆணையைக் கொடுத்து, சர்வதேசப் பரப்பு உள்ளடங்கிய பொதுவெளியில், நம்பகமான முறையில், மக்களாட்சி அறத்திற்குட்பட்டு, காலந்தவறாது வெளிப்படுத்தச் செய்வதற்குரிய சட்டகத்தை உருவாக்குதலே என்பதை இங்கு தெளிவுபடுத்தவிரும்புகிறோம்.

இதைத் தவறாக, தமிழ் அரசியல் கட்சிகளை, அல்லது கூட்டமைப்பு மற்றும் முன்னணிகளை, கட்டமைப்பு ரீதியாக இணைக்கும் முன்னெடுப்பாக விளங்கிக்கொள்ள வேண்டாம் என்பதைச் செயற்குழு அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறது. தேர்தல் அரசியலின் நெளிவு சுழிவுகளுக்குள் நுழைவதோ, கட்சிகளுக்கிடையே அல்லது அவற்றுக்குள்ளே இருக்கக்கூடிய பிணக்குகளுக்குள் தலையிடுவதோ, அல்லது அவற்றை ஆராய்வதோ இந்த முன்னெடுப்பின் இலக்கு அல்ல.

எதிர்காலத்தில், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உரிய படிமுறைகளில் உள்வாங்கிச் செயற்படுத்தக்கூடிய வகையில், இதன் ஆய்வெல்லைகள் ஆரம்பத்திலேயே விரிவுபடுத்தப்பட்டிருக்கும் என்பதையும் மக்களுக்கு அறியத்தர விரும்புகின்றோம்.

செயற்குழுவின் பூர்வாங்கத் திட்டமிடற் செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும், வடக்கு-கிழக்கு இணைந்த இம் முன்னெடுப்பின் பொதுத்தொடர்புகளைக் கையாள்வதற்குமான சட்டத்தரணிகள் குழுவை, இம் முன்னெடுப்பைப் பொது முயற்சியாக ஆரம்பித்தவர்கள் நியமித்துள்ளனர். பன்முகப்பட்டு, பல மாவட்டங்களில் இருந்தும், பாற்சமநிலையோடு சட்டத்தரணிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற விருப்போடு, மூவருக்குப் பதிலாக, ஐவர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, இளம் தலைமுறையினரின் பங்கேற்பு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பட்டறிவு கொண்ட சட்டத்தரணிகளும் பங்கேற்கிறார்கள். மேலும் சில சட்டத்தரணிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபாட்டுக்கான விருப்பை வெளியிட்டுள்ளனர்.

பூர்வாங்கச் செயற்குழு, மற்றும் பொதுத் தொடர்புக் குழு, ஆகிய இரண்டும் இணைந்ததே ஒட்டுமொத்த முன்னெடுப்பின் செயற்குழு ஆகும். இச் செயற்குழு தன்னை ஆரம்பித்தவர்களோடு இணைந்தே மக்களாட்சி அறத்துக்கிணங்க முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவிருக்கிறது.

முதற்கட்டமாக, செயற்குழுவுக்குத் தரப்பட்டுள்ள சிக்கலும், பணிக்குரிய இலக்கும் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் போலவே, பூரணப்படுத்தப்பட்டுள்ள பொதுத்தொடர்புக் குழுச் சட்டத்தரணிகள், முன்னெடுப்புக்குரிய ஆய்வெல்லைகளை எதிர்வரும் நாட்களில் வகுக்கவுள்ளனர்.

இந்த அறிக்கை வெளியாகும் பொழுதில், செயற்குழுவின் இணையத்தளமான www.tamildemocracy.org இல், தரப்பட்டுள்ள சிக்கலும், பணியின் இலக்கும், ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகியிருக்கும். இவற்றை மேலும் மெருகூட்ட விரும்புவோர், தமது வரைபுகளை, மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கலாம். முறையாக வடிவமைக்கப்படாத ஆரம்பநிலையிலேயே இணையத்தளம் தோற்றமளித்தாலும், உள்ளடக்கத்தின் தேவை கருதி, வகுக்கப்படும் ஆய்வெல்லைகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் அங்கு தொடர்ச்சியாக அறியத்தரப்படும்.

ஆய்வெல்லைகளை முழுமையாக வகுத்தவுடன், வரையறை சார்ந்த பொருள்கோடல்களுக்கான கேள்விக்கொத்தொன்றை, பொதுத் தொடர்புக்குழு தயாரிக்கும். அந்தக் கேள்விக்கொத்தை, மீள் வடிவமைக்கப்படும் இணையத்தளத்தில் வெளியிட்டு, அதன் மூலம், மக்கள் தளத்திலிருந்தான பதில்களையும் ஆலோசனைகளையும் பரவலாகப் பெற்றுக்கொள்ள செயற்குழு திட்டமிட்டிருக்கிறது.

அத்தோடு, செயற்குழுவின் திட்டமிடல் குறித்த விளக்கக் காட்சி ஒன்றும் எதிர்வரும் நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரிமாறக்கூடிய வகையில் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

இம் முயற்சி தொடர்பான பரீட்சார்த்த வழிவரைபடமும் தற்போது வகுக்கப்பட்டுள்ளது. குழுக்கூட்டங்களின் மூலம் அடையப்படும் முடிவுகளின் அடிப்படையிலும், பின்னூட்டங்களின் மூலம் கிடைக்கும் ஆலோசனைகளின் மூலமும், இந்த வழிவரைபடம் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படும். வழிவரைபடத்தின் முக்கிய மைற்கற்கள் எட்டப்படுகின்றபோது, தேவைக்கேற்ப இணையவழிப் பொதுக்கூட்டங்களும் பொதுத் தொடர்புக் குழுவால் நடாத்தப்படும்.

இயன்றவரை, கேள்விகளையும் கருத்துக்களையும் மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பது, அவற்றைத் தவறவிடாது கையாள்வதற்கு உதவியாக இருக்கும். எனினும், பொதுத் தொடர்புக்குழுவோடு தொலை பேசியில் தொடர்புகொள்ள வேண்டிய அவசிய தேவை ஏதும் இருப்பின், மாலை ஏழு மணிக்கும் இரவு ஒன்பது மணிக்கும் இடையில் (0)77 852 4349 எனும் அலைபேசி இலக்கத்துடன் மட்டும் தொலைபேசித் தொடர்புகளை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

சட்டத்துறையில் 14 வருட அனுபவம் கொண்ட சட்டத்தரணி எவ்.எக்ஸ்.எஸ் விஜயகுமார் (மட்டக்களப்பு) இக்குழுவின் இணைப்பாளராகப் பணியாற்றுவார்.

வெளிப்படைத் தன்மை கருதி, பொதுத்தொடர்புக்குழுவில் இணைந்துள்ள இதர சட்டத்தரணிகளின் பெயர்விபரங்களையும் அறியத்தருகிறோம்: யாழினி கௌதமன் (வவுனியா, 11 வருட நீதிமன்ற அனுபவம்) அவர்களுடன் இளம் சட்டத்தரணிகள் சிவகுமார் ஐஸ்வர்யா (திருகோணமலை), வீ. எஸ். எஸ். தனஞ்சயன் (முல்லைத்தீவு) மற்றும் இந்த அறிவித்தலை மேற்கொள்ளும் அ. அன்ரனி றொமோள்சன் (மன்னார்) பங்காற்றுவர். ஏனைய மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்க முன்வருவோரை பால்நிலைச் சமத்துவத்துடன் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

இவ்வண்ணம்,

அ. அன்ரனி றொமோள்சன்,
சட்டத்தரணி, மன்னார்

மேற்பார்வை:

அதி. வண. கலாநிதி கி. நோயல் இம்மானுவேல்
ஆயர், திருகோணமலை மறை மாவட்டம்

தவத்திரு அகத்தியர் அடிகளார்
முதற் குருமகா சந்நிதானம்
தென்கயிலை ஆதீனம்
திருகோணமலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More