நேற்றையதினம் இரவு உலகம் முழுவதும் முதன் முறையாக தொடர்ச்சியாக பல மணி நேரம் சமூக வலைதளங்களான முகப்புத்தகம் , வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கியிருந்தமைக்கு முகப்புத்தக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளாா்.
முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் மீண்டும் சரியாகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எந்தளவு நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்’ என மார்க் சூக்கர்பர்க் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 7 மணிநேரம் இதன் சேவைகள் முடங்கியிருந்தமையினால் முகப்புத்தக நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தததன் காரணமாக அந்நிறுவனத்துக்கு 700 கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இணைய சேவைகளின் தடங்கல்கள், முடக்கம் ஆகியனவற்றை கணிக்கும் டவுன்டிடக்டர் என்ற நிறுவனம் சமீப காலத்தில் ஏற்பட்ட மிக நீண்ட முடக்கம் இதுவென்று தெரிவித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2019ம் ஆண்டில் முகப்புத்தக சேவை முடங்கியது எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சுமார் 17 நிமிடங்கள் இந்த சேவைகள் முடங்கி மீண்டது. ஆனால், நேற்று தொடர்ச்சியாக பல மணி நேரம் ஒரே நேரத்தில், முகப்புத்தகம், வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் , மெசஞ்சர் ஆகியன முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது