பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவித்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய போது, வன்முறைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் போது அக்கும்பலை சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
அதேவேளை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன்போது, தம்மால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபரையும் , காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் தமது பாதுகாப்பின் கீழ் சந்தேகநபரை பொறுப்பெடுத்த நிலையில், காவல்துறை பாதுகாப்பில் இருந்து அந்நபர் தப்பி ஓடியுள்ளார். காவல்துறையினர் வேண்டுமென்றே சந்தேக நபரை தப்பவிட்டனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களை காவல்துறையினர் வேண்டும்மென்றெ தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பில் சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இருவரையும் எதிர்வரும் 08ஆம் திகதி அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
அதேவேளை பாதிக்கப்பட்டவர் ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.