பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் இன்று தனது 65 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி பிறந்த பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.
பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’, செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார்.
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்த பிறைசூடன். 5000-க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, 2015ல் தமிழக அரசின் கபிலர் விருது பெற்றிருக்கிறார்.