பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயுக்கான விலை கட்டுபாடு நீக்கப்பட்டதானது, டொலர் தொடர்பான பிரச்சினையால் அல்ல என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், டொலர் தொடர்பான பிரச்சனை என்றால் அரிசிக்கான கட்டுபாட்டு விலையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று (11.10.21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சிலர் வாயில் வடை சுட்டாலும் இறுதியில் அரிசியின் விலையை தீர்மானித்தது அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேனவே. ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையில் உள்ள எவருக்கும் அரிசியின் விலையை தீர்மானிக்க முடியாமல் போனது. எனவே, நெல்லின் விலையையும் அரிசியின் விலையையும் தீர்மானிப்பது அரிசி ஆலை உரிமையாளர்கள் போல், பால்மா, கோதுமை மா என்பவற்றின் விலையையும் தீர்மானிப்பது கம்பனிகாரர்களே எனவும் சுட்டிக்காட்டினார்.
இன்று அரசாங்கமோ, நிர்வாகமோ நாட்டில் இல்லை. இந்த விடயத்தில் இந்த அரசாங்கம் தமது பொறுப்பிலிருந்து விலகியுள்ளது.
பொருள்களின் விலையை கம்பனிக்காரர்கள் தீர்மானிப்பார்களாயின் ஜனாதிபதியோ அமைச்சரவையோ நாட்டில் எதற்கு? என கேள்வி எழுப்பிய அவர், ஒரே நாடு ஒரே சட்டம் என ஜனாதிபதி அடிக்கொரு தடவை கூறினாலும் அவ்வாறானதொன்று இலங்கையில் இல்லை.
எனவே இன்று ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கட்டுபாடு இன்றியே அனைத்தும் நடப்பதாக மக்களுக்கு தெரிந்துவிட்டது. எனவே இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் வயலிலுள்ள சோளக்காட்டு பொம்மை போல ஆகிவிட்டது என்றார்.