பெலாரஸ் – லித்துவேனியா எல்லைப்பகுதி குடியேற்றவாசிகளுக்கு ஆபத்தானஇடமாக மாறியுள்ளது. பெலாரஸ் நாட்டினூடாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நுழைய முயல்வோர் இரு நாடுகளினதும் எல்லைக்காவல் படைகளால் மாறிமாறிப் பந்தாடப்படும் நிலை அங்கு காணப்படுகிறது.
பதற்றம் நிறைந்த அந்த எல்லைப் பகுதியில் இருந்து இலங்கையர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பெலாரஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.கடந்த 5ஆம் லித்துவேனியாவுடனானதேசிய எல்லையில் இருந்து 500 மீற்றர்கள் தொலைவில் கண்டு மீட்கப்பட்ட அந்தச் சடலம் இலங்கையைச் சேர்ந்த 29வயதுடைய ஆண் ஒருவருடையது என்பதை சடலத்துடன் காணப்பட்ட ஆவணங்கள் மூலம் பெலாரஸ் காவல்துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெலாரஸ் -1தொலைக்காட்சிச் சேவை(Belarus 1 TV channel) இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.உயிரிழந்த இலங்கையர் லித்துவேனியா எல்லைக்குள் நுழைய முயன்று பல தடவைகள் அந்நாட்டின் எல்லைப்படையால் விரட்டப்பட்ட குடியேறிகள் குழு ஒன்றைச் சேர்ந்தவர் என்ற தகவலை பெலாரஸ்அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் அவரது உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவரவில்லை. மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனையும் தடயவியல்சோதனைகளும் நடத்தப்படவுள்ளன என்று பெலாரஸ் அதிகாரிகளை ஆதாரம் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விசாரணையாளர்கள் அப்பகுதி உள்ளூர்வாசிகளிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியேற்றவாசிகள் எல்லை தாண்டி லித்துவேனியாவுக்குள் செல்வதைப் பெலாரஸ் படைகள் தூண்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
லித்துவேனியாதனது எல்லையில் வேலிகளைப் பலப்படுத்திப் படைகளை நிறுத்திக் குடியேற்றவாசிகளைத் தடுத்து வருகிறது.தடுத்துநிறுத்தப்பட்ட பலர் எல்லையோரம் பசிபட்டினியாலும் குளிரிலும் சிக்கியும் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று மனிதநேய அமைப்புகள் கூறியுள்ளன.
லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியநாடு என்பதால் அங்கு நுழைகின்ற அகதிகள் அங்கிருந்து மேற்கு ஐரோப்பியநாடுகளை நோக்கிச் செல்ல அது வாய்ப்பாகிறது. ஐரோப்பாவினுள் ஆட்களைச் சட்ட விரோதமாகக் கடத்துகின்ற குழுக்கள் பெலாரஸ் நாட்டில் தோன்றியுள்ளஅரசியல் நெருக்கடியைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆட்களைக் கடத்தி வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பலரும் பெலாரஸ் வழியே ஐரோப்பாவினுள் நுழைய முயன்று வருகின்றனர்.ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் பலர் இப்போது பெலாரஸ் சென்று அங்கிருந்து லித்துவேனியா, போலந்து நாடுகளுக்குச் செல்ல முயன்றுவருவது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெலாரஸ் – போலந்து எல்லையிலும்குடியேறிகள் ஊடுருவல் பதற்றத்தைத்தோற்றுவித்துள்ளது. ஒரே நாளில் 739வெளிநாட்டவர்கள் பெலாரஸின் எல்லைதாண்டி போலந்துக்குள் நுழைந்துள்ளதால் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.12-10-2021