இலங்கைக்கு பயணம் செய்திருக்கும் இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை , ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13.10.21) சந்தித்துக் கலந்துரையாடினார்.
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார்.
தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.
பல தேச எல்லைகளால் சூழ்ந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மலைசார்ந்த கடினமான பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் தலைமைப் பயிற்சிபெறும் அதிகாரிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகள் பரிந்துரைக்கும் தரநிலைகள் போன்ற விடயங்களை, ஜெனரல் மனோஜ் முகுந்த், ஜனாதிபதியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
படைப் பிரிவொன்றின் தளபதியாக நியமனம் பெற்ற பின்னரே,தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகள் அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்த ஜெனரல், அந்தந்தத் தரநிலையினர் ஓய்வுபெறும் வயதெல்லைகள் குறித்தும் விவரித்தார்.
இலங்கை இராணுவ அதிகாரிகளில் சுமார் ஆயிரம் பேர், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பயிற்சிகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வேண்டுகோளுக்கமைய, மேற்படி இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் 50 இராணுவ அதிகாரிகளுக்கு, எதிர்காலத்தில் விசேட பயிற்சிப் பாடநெறிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஜெனரல் மனோஜ் முகுந்த் தெரிவித்தார்.
இந்திய அமைதிப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திருகோணமலை – 4ஆம் மைல்கல் பிரதேசத்தில் தான் பணியாற்றிய காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் நினைவுகள், தற்போதைய இந்த விஜயத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும், ஜெனரல் மனோஜ் முகுந்த் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில், அந்த நினைவுகள் பற்றிக் கலந்துரையாடக் கிடைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் இந்திய இராணுவத் தலைமையகத்தின் பயிற்சிகளுக்கான கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஜீவ் தாபர், இராணுவ ஆலோசகர் ஜெனரல் விக்ராந்த் விளாஸ் நாயக், வெளிவிவகாரப் பிரிவின் உறுப்பினர் கேர்ணல் மந்தீப் சிங் தில்லன், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும், கலந்துகொண்டிருந்தனர்.