ஏழாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை, அயலவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தப்பிக்கவிட்ட நிலையில் ஒருவர்காவல்துறையினரினால் மீளவும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் என தமக்கு சுன்னாக காவல்துறையினர் அறிவித்து உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.
ஏழாலையில் கடந்த 4ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கினர். தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் மடக்கிப் பிடித்து சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எனினும், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்திலும் பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் சுன்னாகம் காவல்துறையினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.
தாக்குதல் நடத்த வந்தவர்களை மூன்று நாள்களுக்குள் கைது செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம்காவல்துறையினர் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்களில் ஒருவர் சுன்னாகம் காவல்துறையினரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
மற்றைய சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார் என்று காவல்துறையினரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது