யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இருந்து சுன்னாகம் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை இடைமறித்து ஏறிய நால்வர் கொண்ட குழு வொன்று , சாரதி, நடத்துனர் மற்றும் பயணி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளது. சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை , சாவகச்சேரி பகுதியில் இடை மறித்து நால்வர் எறியுள்ளனர். பேருந்தில் ஏறியவர்கள் பேருந்து சாரதியை தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளனர்.
அதனால் , சாரதி பேருந்தை நிறுத்தி அவர்களை இறங்குமாறு பணித்தார். அதற்கும் அவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்ட போது , நடத்துனரும் அவர்களை இறங்குமாறு பணித்த போது , அவர்கள் சாரதி மீதும் நடத்துனர் மீது தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
அதன் போது பேருந்தில் பயணித்த முதியவர் தாக்குதலாளிகளை தடுக்க முற்பட்ட போது முதியவரையும் சரமாரியாக தாக்கி விட்டு அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த முதியவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்