உலகம் பிரதான செய்திகள்

பிரிட்டிஸ் Conservative MP Sir David Amess கத்திக்குத்து தாக்குதலில் பலி!

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமேஸ் (Conservative MP Sir David Amess) கத்திக்குத்து தாக்குதலில் பலியாகியுள்ளார். கொன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய  நேரம் பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ- பகுதியில் சேர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல்  கிடைத்ததாகவும் அதற்கமைவாக ஒருவரை தாம் கைது செய்துள்ளதாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதாகியவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு எவரையும் காவற்துறையினர்  தேடவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில்  1983ஆம் ஆண்டு முதல்  நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் 69 வயதான டேவிட் அமேஸ்  செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.

பெல்ஃபேர்ஸ் தேவாலயத்தில் தமது தொகுதிவாசிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டபோது தாக்குதலுக்கு ஆளாகி இருக்கும் அவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக வான் வழியாக ஹெலிகாப்டர் அம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனாலும் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.

“அரசியலில் மிகவும் கனிவான, அழகான, மென்மையான மனிதர்களில் டேவிட் அமேஸ் ஒருவர்” என, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது ட்விட்டர் பதிவில் இரங்கள் வெளியிட்டுள்ளார். அத்துடன்  ”இன்று நாங்கள் ஒரு நல்ல பொது ஊழியர், மிகவும் பிரியமான நண்பர் மற்றும் சக சேவகரை இழந்துவிட்டோம்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இறப்பு குறித்து பிரித்தானிய சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவிட் கூறுகையில், “டேவிட் ஒரு சிறந்த மனிதர், சிறந்த நண்பர், மற்றும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். தனது ஜனநாயக கடமையை ஆற்றும்போது அவர் கொல்லப்பட்டுள்ளார்,” என குறிப்பிட்டுள்ளார்.

“வன்முறையின் மோசமான அம்சம் அது மனிதாபிமானமற்று இருப்பதுவே. அது உலகின் மகிழ்ச்சியைத் திருடுகிறது, நாம் மிகவும் விரும்புவதை நம்மிடமிருந்து பறிக்கிறது,” “இன்று அது ஒரு தந்தை,  கணவர் மற்றும் மரியாதைக்குரிய சக மனிதரை பறித்து விட்டது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சேர் டேவிட்டின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன,” என பிரித்தானிய நிதித்துறை செயலாளர் (சான்சலர்) ரிஷி சுனக்,  கூறியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.