ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை முகாமில் நடந்த ஒரு வைபவத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.இது அரசாங்கம் அதன் யாப்புருவாக்க முயற்சியில் மெய்யாகவே ஈடுபடுகிறதா என்ற கேள்வியை மேலும் வலிமைப்பப்படுத்தியிருக்கிறது.
யாப்புருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய யாப்புக்கான சட்ட வரைபை அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.அதை நம்பித்தான் சம்பந்தர் அண்மைக்காலங்களில் ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படும் என்று என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்து வருகிறாரோ தெரியவில்லை. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகளோடு பேசியபொழுது சம்பந்தர் ஒரு புதிய யாப்பு உருவாக இருப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதன்பின் இந்திய வெளியுறவுச் செயலர் இலங்கைக்கு வர இருந்த பின்னணியில் சம்பந்தர் பங்காளிக் கட்சிகளை நோக்கி ஓர் அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூட்டமைப்பின் ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விட்டிருந்ததோடு ஒரு புதிய யாப்பு உருவாகவிருக்கும் சூழலில் கூட்டமைப்பின் ஐக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்படவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஒரு புதிய யாப்பைக் குறித்த கருத்துக்களை அவர் இந்திய வெளியுறவுச் செயலரைச் சந்திக்கும்போது கூறுவதைத் தவிர்ப்பது நல்லது என்று பங்காளிக் கட்சிகள் கருதியதாக தெரிகிறது. மாறாக சந்திப்பின்போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வெளியுறவுச் செயலரிடம் கேட்கவேண்டும் என்று ஒரு பங்காளி கட்சி சம்பந்தருக்கு வலியுறுத்தியதாக தெரிகிறது.சந்திப்பின்போது மேற்படி பங்காளிக் கட்சியின் தலைவர் அதனை தொடக்கத்திலேயே வெளியுறவுச் செயலரை நோக்கி ஒரு வேண்டுகோளாக முன்வைத்ததாகவும் அறிய முடிகிறது. இந்திய வெளியுறவுச் செயலரின் நிலைப்பாடும் அதுவாக இருந்த காரணத்தால் உரையாடலில் அந்த விடயம் பேசப்பட்டிருக்கிறது. எனினும் உரையாடலின் போக்கில் சம்பந்தர் ஒரு புதிய யாப்பை குறித்தும் கருத்து கூறியதாக அறியமுடிகிறது.
பல மாதங்களுக்கு முன்பு கூட்டமைப்பினர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோதும் இது குறித்து அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஒரு புதிய யாப்பை உருவாக்கும் பொழுது 13வது திருத்தம் என்ற பேச்சு எழப்போவதில்லை. அப்புதிய யாப்பிற்குள் 13ஆவது திருத்தத்தின் முழு அளவு உள்ளடக்கமும் இணைக்கப்படுமாயிருந்தால் பிரச்சினை இல்லை.
மாறாக 13ஆவது திருத்தத்தை விடக் குறைவான அதிகாரங்களே அதில் இருந்தால் அதைக் குறித்து இந்தியா அழுத்தம் எதையும் பிரயோகிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் ஒரு புதிய யாப்பை உருவாக்குவது என்பது இலங்கைதீவில் உள்நாட்டு விவகாரம்.அதேசமயம் 13வது திருத்தம் என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் விளைவு. அதனால் இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இந்தியா அதில் தலையிடமுடியும் என்ற தொனிப்பட ஜெய்சங்கர் கூட்டமைப்பிடம் கருத்துத் தெரிவித்ததாக தெரிகிறது. எனினும் கடந்த 12ஆண்டுகளாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையை வற்புறுத்தவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டிட வேண்டும்.
ஜெய்சங்கரைச் சந்தித்த பின்னரும் சம்பந்தர் ஒரு புதிய யாப்பைக் குறித்து பேசுமளவுக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அழுத்தமாகப் பேசுவதாகக்த் தெரியவில்லை..இந்தியாவின் அழுத்தத்தோடு ஒரு தீர்வைப் பெற முயற்சித்தால் அது சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளும் என்று அவர் கருதுவதாகத் தெரிகிறது. சிங்கள மக்களை பயமுறுத்தாமல் ஒரு தீர்வை பெறுவதாக இருந்தால் இந்தியஅழுத்தம் என்ற விவகாரம் ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியில் ஒரு விவகாரமாக இருக்கக்கூடாது என்று சம்பந்தர் கருதுகிறாரோ தெரியவில்லை.
கடந்த வாரம் ஜனாதிபதி அனுராதபுரத்தில் வைத்து ஆற்றிய உரை சம்பந்தரின் நம்பிக்கையை பதப்படுத்தக்கூடும்.கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின்போது அரசாங்கம் கொழும்பிலுள்ள தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் அனுப்பிய அறிக்கையில் நிலைமாறுகால நீதி செய்முறைகளை ரணில் விக்கிரமசிங்க விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து தான் முன்னெடுப்பதாக ஒரு தோற்றத்தை காட்டியிருந்தது.அத்தோற்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு புதிய யாப்பைக் குறித்தும் பேச வேண்டியுள்ளது. ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஒரு புதிய யாப்பை எந்த அடிப்படையில் உருவாக்குவது? என்பதுதான்.
அண்மையில் இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த மிலிந்த மொரகொட கூறுவதுபோல அது இந்தியாவின் உதவியோடு கூடிய ஒரு உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க முடியுமா? இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் பிராந்திய மயப்பட்டுவிட்டன; அனைத்துலக மயப்பட்டுவிட்டன.திம்புவில் தொடங்கி ஓஸ்லோ வரையிலும் அதன்பின் ஜெனிவா வரையிலும் அது போய்விட்டது.எனவே அதற்கு உள்நாட்டு தீர்வு கிடையாது.இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றைக் காண்பது என்றால் ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணையோடு கூடிய ஒரு சமாதான உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையே எழுதப்பட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவின் யாப்புருவாக்கக் குழுவிற்கு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த முன்மொழிவில் இது கூறப்பட்டுள்ளது.அவ்வாறு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்ததத்தோடு ஒரு சமாதான உடன்படிக்கை எழுதப்பட்ட பின்னரே அந்த உடன்படிக்கையில் உடன்பாடு காணப்பட்ட விடயங்களை ஒரு சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கத்தோடு ஒரு யாப்பை வரைய வேண்டும்.மாறாக இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுக்க முழுக்கஒரு யாப்புருவாக்க முயற்சியாகக் குறுக்கக்கூடாது.
ரணில் விக்ரமசிங்கவின் யாப்புருவாக்க முயற்சிகளில் இந்த இரண்டு அம்சங்களில் ஒன்றாகிய மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் என்ற அம்சம் ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானமானது நிலைமாறுகால நீதிக்குரியது. நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் ஒரு தீர்வைக் காணும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. யாப்புருவாக்கத்திற்காக வழிநடத்தற் குழுவும் உபகுழுக்களும் உருவாக்கப்பட்டு ஒரு யாப்புக்கான இடைக்கால வரைபுவரை அது முன்னேறியது.
ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வுக்கான முயற்சிகளை இக்கட்டுரை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அவர் ஒரு விடயத்தை ஒப்பீட்டளவில் செய்ய்ய முற்பட்டார்.அது என்னவெனில் யாப்புருவாக்க முயற்சி என்பது பொறுப்பு கூறலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், நல்லிணக்கப் பொறிமுறையின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அது. அதேசமயம் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்போடு சேர்ந்து வேறு ஒரு தந்திரத்தையும் செய்தார். என்னவெனில், நீதி விசாரணைகளில் இருந்து தீர்வுக்கான முயற்சிகளைப் பிரித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வையும் நீதி விசாரணையையும் வேறு வேறு ஆக்கினார்.
இப்பொழுது கோட்டாபய அதன் அடுத்த கட்டத்துக்கு போக முயற்சிக்கிறாரா?அவர் யாப்புருவாக்க முயற்சிகளை பொறுப்புக்கூறலில் இருந்து பிரிக்க முயற்சிக்கிறார்.
ஒரு புதிய யாப்பு ஏன் தேவைப்படுகிறது? பழைய யாப்பு பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டது என்பதனால்தானே? பழைய யாப்பு ஏன் பிரச்சினைகளை தீர்க்க தவறியது ? எனேன்றால் பழைய யாப்பு நாட்டின் பல்லினத் தன்மையை பாதுகாக்கத் தவறி விட்டது என்பதால்தான். அப்படி என்றால் ஒரு புதிய யாப்பு இலங்கை தீவின் பல்லினத் தன்மையை பாதுகாக்கும் நோக்கிலானதாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமா? தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற வெற்றிக் கோஷம் பல்லினத் தன்மைக்கு எதிரானது.நல்லிணக்கத்துக்கு எதிரானது.நிலைமாறுகால நீதிக்கு எதிரானது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவது என்பது நல்லிணக்கப் பொறிமுறையின் பிரிக்கப்படமுடியாத ஒரு பகுதியாக அமைய வேண்டும். ஆனால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாத ஒரு அரசாங்கம் எப்படி அப்படிப்பட்ட ஒரு யாப்பை உருவாக்க முடியும்? இதுதான் பிரதான கேள்வி.
மிகக்குறிப்பாக, ஐநாவில் வெளியக பொறிமுறையை இந்த அரசாங்கம் நிராகரிக்கிறது.உள்ளகப் பொறிமுறையைத்தான் வலியுறுத்துகிறது. இந்தியாவுக்கான புதிய தூதுவர் மிலிந்த மொரகொட இனப்பிரச்சினைக்கு தீர்வாக உள்ளூர் தயாரிப்பான ஒரு தீர்வைதான் மனதில் வைத்திருப்பதாக தெரிகிறது. அப்படி என்றால் ராஜபக்சக்கள் உள்ளகப் பொறிமுறை, உள்நாட்டு விசாரணை, உள்நாட்டுத் தயாரிப்பான ஒரு தீர்வு என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே தொகுத்துப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் சித்திரம் தெளிவானது.
இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற எல்லாவற்றையும் அனைத்துலகமய நீக்கம் செய்வதற்கு அல்லது பிராந்தியமய நீக்கம் செய்வதற்கு முயற்சிக்கின்றதா? அவ்வாறு நல்லிணக்கத்தை,பொறுப்புக்கூறலை,இனப்பிரச்சினைக்கான தீர்வை வெளியாரின் தலையீடுகள் அற்ற உள்நாட்டு வடிவிலானதாக மாற்றுவது என்பது இறுதியிலும் இறுதியாக தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் ஒரு உத்திதான்.அவ்வாறு பொறுப்புக்கூறலை உள்நாட்டுக்குள் குறுக்கும் ஒரு உத்திக்கு கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கக் கூடாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கருதுவதாக தெரிகிறது.
மேலும்,அண்மையில் ஐநாவுக்கு ஒன்றாகக் கடிதம் எழுதிய ஐந்து கட்சிகளும் அவ்வாறே சிந்திப்பதாக தெரிகிறது.13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதனை சமாதானப் பேச்சுக்களுக்கான ஒரு முன்நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று அவை கேட்கின்றன.பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையே நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதற்கான ஒரு நிபந்தனையாக 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மேற்படி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அப்படி ஒரு முன்நிபந்தனையை முன்வைத்தால் அது இந்தியாவையும் இது விடயத்தில் பொறுப்புக்கூற வைக்கும் என்று பங்காளிக் கட்சிகள் கருதுகின்றன.
13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தரப்பு கோரிக்கை வைக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதுவிடயத்தில் தமிழ்த் தரப்பு அதற்காக உழைத்தால்தான் இந்தியாவும் சேர்ந்து செயல்படலாம் என்ற தொனிப்பட இந்திய வெளியுறவுச் செயலர் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.சம்பந்தர் அதற்கு உடன்பாடு தெரிவித்ததாகவும் தெரிகிறது. ஆனால் அதே சமயம் ஒரு புதிய யாப்பைக் குறித்த கற்பனைகளும் அவரிடம் இருப்பதாகத் தெரிகிறது.
1 comment
தமிழர்களும் மற்றும் பாதிக்கப்பட்ட எல்லோரும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் அரசாங்கத்திற்கு முதலில் வர வேண்டும். இதை அடைவதற்கான பணிகளை தமிழ் காட்சிகளும் ஏனையோரும் சோர்வடையாது தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த முயற்சி, எல்லோரும் விரும்பும் யாப்பை உருவாக்க உதவக்கூடியது.