வடக்கு மாகாணத்தில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்ப பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுகின்றன. வடக்கு மாகாண கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன என்று மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
“நீண்ட இடைவெளிக்குப் பின் பாடசாலைகள் திறக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவரும் நன்றிகூறி பாராட்டுகின்றேன்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களது அர்ப்பணிப்பான சேவை பாராட்டுக்குரியது” என்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை “வடக்கு மாகாணத்தில் நாளை ஆரம்பிக்கப்படும் 639 பாடசாலைகளும் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நாளை முன்னெடுக்க தயார் நிலையில் உள்ளன. சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்குரிய கைகளைத் சுத்தப்படுத்தும் திரவம் உள்ளிட்டவையும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்று வடமாகாண கல்விப் பணப்பாளர் செல்லத்துரை உதயகுமார் தெரிவித்தார்.