கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், வன்முறையில் ஈடுபட்டோர் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் வீடொன்றுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டு யன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட அந்த இளைஞன் சிலரை அழைத்து இந்த அடாவடியில் ஈடுபடவைத்தார் என்று கோப்பாய் காவல் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய நீர்வேலியைச் சேர்ந்த இருவர் காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரினால் இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் கோப்பாய் காவல்நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கர வண்டி காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியான நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏனைய 9 பேர் தொடர்பிலும்காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.