கொலம்பியாவில் கடந்த25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த டெய்ரோ அன்டோனியோ உசுகா கடந்த சனிக்கிழமை கொலம்பியாவின் விமானப்படை, ராணுவம், காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார். அமெரிக்கா டைரோ உசுகாவை கண்டுபிடித்து தருபவா்களுக்கு ஐந்து மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் அவரை பிடிப்பதற்காக சுமார் 5 ஆயிரம் வீரர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் பனாமா நாட்டு எல்லைப் பகுதியான நெக்கோக்லி வனப்பகுதியில் அன்டோனியோ பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், 22 ஹெலிகாப்டர்களுடன் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர் சுரங்கம் ஒன்றில் மறைந்திருந்த அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகஅரசு தெரிவிக்கப்படும் நிலையில் அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என கொலம்பியா அறிவித்துள்ளது.
டைரோ 2003 முதல் 2014 ஆண்டுகளுக்கு மத்தியில் குறைந்தபட்சமாக 73 மெட்ரிக் தொன் கொகைன் போதைப் பொருளை இறக்குமதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.