இன்று இந்த உலகத்தில் மனிதர்களும் பிற உயிரினங்களும் பௌதீகச் சூழலும் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களிலுமிருந்து விடுதலை பெறுவதற்கு வழிகாட்டும் செயல்வழி மார்க்கமாக பெண்ணிலைவாத வாழ்வியல் முறைமைகள் காணப்படுகின்றன. இந்த வாழ்வியல் முறைமைகளை உலகம் முழுவதிலும் பரவலாக்கி வேர்கொள்ளச் செய்து வாழ்க்கையை அழகாக்கும் ஆக்கபூர்வமான போராட்டத்தில் பல்வேறு பெண்ணிலைவாத ஆளுமைகள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக பெண்ணிலைவாத வாழ்வியலை நடைமுறைக்குக் கொண்டு வரும் செயல்வாதங்களில் இத்தகைய ஆளுமைகள் மிகப் பெரும்பாலும் அதிகாரக் கட்டமைப்புக்களுக்கு வெளியிலிருந்து சுயாதீனமாகவும் அனைத்துலக சகோதரித்துவம் எனும் வலுவான வலைப்பின்னலூடாகவும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தவகையில் தென்னாசியச் சூழலில் பெண்ணிலைவாதச் செயல்வாதத்தை முன்னகர்த்திச் சென்ற குறிப்பிடத்தக்க மூத்த செயல்வாதியாக இந்தியாவைச் சேர்ந்த மறைந்த கம்லா பாஸின் விளங்கினார். சுமார் அரை நூற்றாண்டு காலமாக தென்னாசியாவில் பெண்ணிலைவாதச் செயல்வாதங்களை பல்வேறு பரிமாணங்களுடன் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு முன்னகர்த்திய ஆளுமைமிக்க உந்துவிசையாக கம்லா பாஸின் அடையாளங் காணப்படுகின்றார்.
சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் என்பவற்றுடன் பெண்விடுதலை மீது இவர்கொண்டிருந்த ஆர்வங்கள் 70களில் இவர் சர்வதேச உணவு ஸ்தாபனத்தில் வேலை செயய ஆரம்பிக்கின்றார். அத்துடன் இலங்கையைச் சேர்ந்த பெண்ணிலைவாத ஆளுமைகளான குமாரி ஜயவர்த்தனா, சுனிலா அபேசேகர, உற்பட தெற்காசியாவைச் சேர்ந்த பெண்ணிலைவாதிகளுடன் இணைந்து பெண்விடுதலை சமூக விடுதலைக்கான குரல்களைப் பலப்படுத்த ஆரம்பிக்ககின்றார். இதன் காரணமாக தென்னாசியப் பிராந்தியத்தில் பல்வேறு பெண்ணிலைவாதச் செயல்வாதங்களும் செயற்பாட்டாளர்களும் உருவாக்கம் பெற்று அவர்களின் முன்னெடுப்புக்கள் ஊடாக பெண்ணிலைவாத வாழ்வியல் பல்வேறு பரிமாணங்களில் தழைத்தோங்கி வருகின்றது.
தேச எல்லைகள் பொய்யானவை மனிதர்களின் பிரச்சினைகளே மெய்யானவை என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கம்லா பாசின் ஒரு தென்னாசிய மனுசியாகவே இயங்கினார். மானுட சம்த்துவத்திற்காக வாழ்வின் ஒவ்வொரு கணமும் விவேகமாகவும் வேகமாகவும் செயலாற்றிக் கொண்டிருந்தவர். நான் என்ன செய்கிறேன், ஏன் செய்கிறேன், எப்படிச் செய்கிறேன் என்று முழுஅளவில் ஒழுங்கமைக்கப்பட்ட உணர்வோட்டத்துடன் செயலாற்றும் ஆளுமையாக விளங்கினார். தான் ஈடுபடும் ஒவ்வொரு விடயங்களிலும் தனது அறிவு வளர்வதாக நம்பிய அவர், அவற்றில் தன்னை மனப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்வதற்காக எப்பொழுதும் ஒரு குறிப்பு ஏட்டுடனேயே காணப்படுவார். தனது உயிர் மூச்சு நிற்கும் வரை குறிப்பேட்டைத் தன்னுடனேயே வைத்திருந்துள்ளார்.
பெண்ணிலைவாதத்தை வாழ்வியலாகக் கருதிய இவருடைய வாழ்வானது தன்னுடன் ஊடாடும் ஒவ்வொரு மனிதரையும் தனித்தனிப் பெறுமதியுடையோராக மதித்துக் கனம் பண்ணுவதாகவே விளங்கி வந்தது. பெண்ணிலைவாத வாழ்வியலை வலுப்படுத்திப் பரவலாக்கும் இவருடைய நடவடிக்கைகள் மிகப்பெரும்பாலும் எளிமையானதும், எல்லோருக்கும் பொதுமையான தொடர்புகொள் வழிமுறைகள் வாயிலாக மிகுந்த திட்டமிடலுடனும் தயார்ப்படுத்தலுடனும் மேற்கொள்ளப்படுபவையாக இருந்துள்ளன. களப்பயிற்சி நடவடிக்கைகளூடாக பாடல்கள், சுலோகங்கள், போஸ்டர்கள் என்பவற்றை வடிவமைத்து உரையாடல்களை வலுவாக்கி வளர்த்துச் செல்வது மற்றும் கேள்வி பதில் முறையில் எழுத்தாக்கங்களை, பிரசுரங்களை, சிறு நூல்களை வடிவமைத்து பரவலாக்குதல் என முழுக்க முழுக்க ஒரு செயற்பாட்டாளராகவே வாழ்ந்து காட்டியவர்.
கம்லாபாஸின் அவர்கள் தென்னாசிய வட்டகையில் பல்வேறு பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் முகிழ்ப்பதற்கான காரியங்களைத் திட்டமிட்டு மேற்கொண்டவராக இருந்தார்.
கம்லா பாசினின் செயல்வாதங்களில முக்கியமானது களப்பயிற்சிகள் ஆகும். அவற்றின் ஊடாக் பால்நிலைசார் அதிகாரக்கட்டமைப்புக்கள் உட்பட அனைத்துவிதமான அதிகாரக் கட்டமைப்புக்களை பகுப்பாய்வு செய்தலும் கேள்வி கேட்டலுக்குமான அறிவு திறனும், வலையமைப்பாக இணைதலும் இந்நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு சாத்தியமாயிற்று. இவர் ‘சங்கத்’-தெற்காசிய பால்நிலை சமத்துவத்துக்கான பயிற்றுவிப்பாளர்கள், செயற்பாட்டனாளர்களின் வலையமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொரு வருடமும் ஓரு மாதகால ஆங்கில மொழிமூலப்பயிற்சியை முன்னெடுத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இப்பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையில் பொது மொழியாக இருக்கும் மொழிகளிலும் இரு நாடுகளை இணைத்த பயிற்சிகளை ஆரம்பித்தார். தமிழ் மொழியிலும் கடந்த 12 வருடங்களாக தமிழ்நாடு இலங்கை பங்குபற்றுனர்களுக்காக நடைபெற்று வருகின்றது. இவருடைய களப்பயிற்சிகளில் பங்குபற்றிய பலரும் தமது வாழ்வில் தமது கருத்து நிலையில் ஒரு திருப்பத்தை எற்படுத்தியவர் என இவரைப்பற்றி நினைவு கூருகின்றார்கள்.
தனிநபர்களை மையப்படுத்தி வழங்கப்பட்டு வரும் நோபல் சமாதான விருது எதார்த்தத்தில் சமாதானத்திற்காகப் பாடுபடும் பல்வேறு மனிதர்களுக்கும் வழங்கப்படுவதே பொருத்தமானதாக இருக்க முடியும் என்ற கருத்தினை முன்மொழிந்து ஆயிரம் பெண்களுக்கு சமாதானப் பரிசை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவிற்சலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரத்தை தெற்காசியாவில் மையமாக நின்று முன்னெடுத்ததுடன் தனது வலையமைப்புக்களின் ஊடாக சமாதானத்திற்காக வாழ்கின்ற செயற்படுகின்ற பெண் ஆளுமைகளை அடையாளங் கண்டு அவர்களுடைய பெயர்களை நோபல் சமாதான பரிசுத் தேர்வாளர்களுக்குச் சமர்ப்பிப்பதில் பெரும் பங்காற்றியவர்.
அதிகாரத்தின் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் சுயாதீனமான மக்கள் இயக்க நடவடிக்கைகளில் பாடப்படும் விடுதலைக் கோசம் (ஆசாதி கோசம்) இவரால் தோற்றுவிக்கப்பட்டதாக இருக்கின்றது.
பெண்களுக்கு எதிரான உலகளாவிய வன்முறைகளை ஒழிக்கும் நோக்குடன் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் பிரச்சாரச் செயற்றிட்டத்தை அதனை உருவாக்கிய ஈவ் என்ஸ்லர் எனும் நாடகவியலாளருடன் இணைந்து முன்னெடுப்பதில் முக்கிய பங்களிப்பு வழங்கிய பேராளுமையாகவும் இவர் இயங்கி வந்தார்.
இவ்விதமாக சமத்துவமானதும் சுதந்திரமானதும் சந்தோசம் நிறைந்ததுமான வாழ்வியலுக்காக அயராது சிந்தித்துச் செயலாற்றிய பேராளுமை கம்லா பாஸின் அவர்கள் கடந்த செப்டெம்பர் 25, 2021 அன்று தனது மூச்சினை நிறுத்திக் கொண்டார். எனினும் இவருடைய வாழ்வும் செயற்பாடுகளும் அவற்றினூடாக நமக்குப் பகிர்ந்துள்ள சிந்தனைகளும் பெண்ணிலைவாத வாழ்வியலுக்கான பயணத்திற்கு வழிகாட்டுவதுடன் பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்களின் உருவாக்கத்திற்கும் வழிப்படுத்தி வருகின்றன.
மூன்றாவதுகண் நண்பர்கள் குழு
மட்டக்களப்பு.