சுன்னாகம் வாழ்வகதின் தலைவரும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஆறுமுகம் ரவீந்திரன் – யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகார குழுவினரால் இந்த ஆண்டிற்கான (2021) யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
திரு ஆறுமுகம் ரவீந்திரன் 03.03.1963 இல் சட்டநாதர் வீதி திருநெல்வேலி கிழக்கில் பிறந்தவர். ஆரம்பத்தில் விழிப்புலன் அற்றோருக்கான கல்வி சவாலுக்கு உரியதாக இருந்த காலகட்டத்தில் – கைதடி நவீல்ட் பாடசாலையில் கல்வி பயின்றார்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 6 முதல் உயர்தரம் வரை கல்வி கற்று 1985இல் பாடசாலையில் இருந்து கலைத் துறையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரே மாணவர் என்ற பெருமையையும் பெற்றார். 1989 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டதாரியாக வெளியேறினார்.
1993 இல் இருந்து 2004 வரை யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 2004 தொடக்கம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி (முதலாவது அணி 2001) பட்டங்களையும் பெற்றவர் இவர்.
1990 களின் முற்பகுதியில் உதயன் பத்திரிகையின் ஆசிரியப் பீடத்திலும் பணியாற்றினார். சிறந்த சிறுகதை ஆசிரியர். நல்லதோர் பாடகர் சிரிக்க சிந்திக்க பேசும் பேச்சாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
வாழ்வக நிறுவுனர் அமரர் திருமதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மாவின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமான இவர் அவரது மறைவைத் தொடர்ந்து 2006 முதல் வாழ்வகத்தின் தலைவராக செயற்பட்டு வருகிறார்
தற்போது வாழ்வகத்தில் விழிப்புலன் சார்ந்த சவாலுக்குரிய 50 மாணவர்கள் வெற்றிகரமாக தமது கல்விப் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர் அவர்களில் பலர் உயர் கல்வியையும் கற்று வருகின்றனர்
அவரது மனைவி தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி உப அதிபர் என்பதுவும் அவரது வெற்றிக்கு பின் நின்று இயங்கும் மகாசக்தி அவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.