அவுஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கி ஒப்பந்த விவகாரத்தை அமெரிக்கா “விகாரமாகக்” கையாண்டுவிட்டது என்று கூறியிருக்கிறார் அதிபர் ஜோபைடன். அதற்காக பிரான்ஸின் அதிபர் மக்ரோனிடம் அவர் தனது கவலையைநேரில் தெரிவித்திருக்கிறார்.
ஐ. நா. பருவநிலை உச்சி மாநாட்டிலும்(COP26), ஜீ-20 நாடுகளது தலைவர்களின் மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காக ஐரோப்பாவுக்கு வருகை தந்துள்ளார் ஜோ பைடன்.அந்த விஜயத்தின் இடையே நேற்று இத்தாலியில் வத்திக்கானில் உள்ள பிரான்ஸின் தூதரகத்தில் வைத்து அவர் அதிபர் மக்ரோனைச் சந்தித்துப் பேசினார்.
நேருக்கு நேரான இந்தச் சந்திப்பின் போது மக்ரோனும் பைடனும் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து தோள் பட்டைகளைப் பற்றிக் கொண்டனர். பிரான்ஸுக்குப் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்திய”Aukus” எனப்படும் நீர்மூழ்கிப் பாதுகாப்பு உடன்படிக்கை விவகாரத்தால் இரு நாட்டு உறவுகளில் பெரும் வெடிப்பு ஏற்பட்ட பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
அதனால் அந்தச் சந்திப்புத் தொடர்பான செய்திகள் இரு நாடுகளினதும் ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்தன. நீர்மூழ்கி விவகாரத்தை அமெரிக்கா கையாண்ட செயலை பைடன் ஆங்கி லத்தில் “விகாரமானது” (“clumsy”) என்றவார்த்தையில் குறிப்பிட்டார். அதற்காக மக்ரோனிடம் கவலையைப் பகிர்ந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்து பிரான்ஸுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது எனத் தான் தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தார் என்ற தகவலையும் பைடன் அங்கு வெளியிட்டார்.சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்ரோன்”நம்பிக்கை என்பதுகாதலைப் போன்றது. அதை வெளிப்படுத்துவது நல்லது. அதை நிரூபிப்பது அதைவிடச் சிறந்தது” – என்று தெரிவித்தார்.
அண்மையில் அவுஸ்திரேலியா, ஜக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா ஆகியன இணைந்து Aukus எனப்படும் நீர்மூழ்கிப் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்தன. பிரான்ஸுடன் ஏற்கனவே உடன்பட்டிருந்த நீர்மூழ்கித் தயாரிப்பு இணக்கப்பாட்டைஇடையில் முறித்துக் கொண்ட அவுஸ்திரேலியா அதுபற்றிப் பாரிஸுக்குத் தகவல்எதனையும் தெரிவிக்காமல் அமெரிக்காவுடன் ரகசியமாகப் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.
தனது நீண்ட காலக் கூட்டாளியாகிய பிரான்ஸைப் புறக்கணித்துவிட்டு அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அந்த ஒப்பந்தம் பாரிஸ் – நியூயோர்க் இடையிலான இருதரப்பு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்காவுக்கான தனது தூதரைத் திருப்பி அழைக்கும் அளவுக்கு பிரான்ஸின் பதில் நடவடிக்கை அமைந்தது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.