(க.கிஷாந்தன்)
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளையில் பெய்யும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நுவரெலியா, இராகலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததையடுத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் இப்பகுதி கிராமசேவகர் ஊடாக இராகலை பொலிஸார் மற்றும் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
அத்தோடு, இந்த பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையே காணப்படுவதாகவும், குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.