சூடானில் கடந்தவாரம், ராணுவ ஜெனரல் அப்தெல் ஃபடாஹ் புர்ஹான், ஜனநாயக ஆட்சியைக் கலைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் தொடர்கிறது.
சனிக்கிழமை சூடானின் தலைநகர் கார்டோம் உட்பட பல்வேறு நகரங்களில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிரதமர் அப்தெல்லா ஹம்தோக்கை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஆயிரக் கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.
ஒம்டுர்மன் நகரத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மூன்று போராட்டக்காரர்கள் இறந்துவிட்டதாக சூடானின் மத்திய மருத்துவர்கள் குழு என்கிற சுயாதீன அமைப்பு கூறியுள்ளது. சூடானின் உள்துறை அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மத்தியிலான மோதலில் 10-க்கும் மேற்பட்டடோர் இறந்துள்ளனர்.
தற்போது சூடான் அதிகாரிகள் இணையம் உட்பட பல்வேறு தொலைத் தொடர்பு வசதிகளைத் துண்டித்துள்ளனர். அதோடு மக்கள் நடமாட்டத்துக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.