இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் இருப்பதைப் போன்று 60 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ சபதம் செய்துள்ளார்.
வத்தளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தை நேற்று (01.11.21) காலை திறந்து வைக்கும் நிகழ்வில், வைத்து இது தொடர்பான சத்தியக் கடதாசி ஒன்றை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஹரின் எம்.பி கையளித்தார்.
இளைய தலைமுறையினர் அரசியல் அமைப்பில் பிரவேசிப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் 60 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் தனியார் மற்றும் அரச துறைகளில் ஓய்வு பெறும் வயது 60 ஆக இருப்பதன் காரணம், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான வாய்ப்புகளை இளைய தலைமுறையினருக்கு வழங்குவதும், புதிய தலைமுறையினர் மாறிவரும் சூழலுக்கு ஏற்ற பயனுள்ள கொள்கைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதும் தான் என்று நான் உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டார்..
அரசியல்வாதிகள் என்ற வகையில் தாமும் நாட்டுக்கு வினைத்திறனான பங்களிப்பு மற்றும் சேவையாற்றியதன் பின்னர், குறிப்பிட்ட காலப்பகுதியில் ஓய்வு பெற்று, இளைய தலைமுறையினர் அரசியல் அமைப்பில் பிரவேசிப்பதற்கு வழி வகுக்க வேண்டும் என உறுதியாக நம்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, 60 வயது வரை மட்டுமே அரசியல்வாதியாக நாட்டுக்கு சேவை செய்யவுள்ளதாகவும், அந்த வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யவுள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாக ஹரின் பெர்னான்டோ சத்தியம் செய்துள்ளார்.