கொரோனா பெரும் தொற்று காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுள் அதிகளவான பக்தர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலய வாசலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கான சிறப்பு ஏற்பாட்டினை ஆலயத்தினர் மேற்கொண்டுள்ளனர். ஆலயத்திற்கு முன்பாக உள்ள வில்லு மண்டப வாயில் முகப்பில் பலிபீடம் மற்றும் மயில் என்பன வைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபட்டு , பலிபீடத்தை தொட்டு வணங்கி மலர் தூவி வழிபட கூடியவாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்நிலையில் இன்றைய தீபாவளி தினத்தினை முன்னிட்டு பலர் நல்லூரானை நேரில் வழிபட வந்திருந்தனர். ஆலயத்தினுள் செல்ல குறிப்பிட்ட அளவிலானோரை மாத்திரமே அனுமதித்தமையால் பலர் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படாதமையால் , வாயில் நின்று முருகனை வழிபட்டு சென்றனர்.
அதேவேளை நாளைய தினம் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாக உள்ளது. கந்த சஷ்டி உற்சவம் நல்லூர் ஆலய உத்தியோக பூர்வ யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பாகும் எனவும் , விரத காலத்தில் ஆலயத்திற்கு நேரில் வருவதனை தவிர்த்து வீடுகளில் இருந்து முருக பெருமானை வழிபடுமாறு ஆலய நிர்வாக அதிகாரி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.