மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது, ‘பக்கவாதம்.’ ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது.
வலது, இடது என்று இரண்டு பாகங்களாக பிரிந்திருப்பது மூளை. வலதுபக்க மூளை இடது பக்க உடலையும், இடதுபக்க மூளை வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஒரு பக்கம் செயல்படாமல் போனாலும் மற்றவை செயல்படாது.
பக்கவாத நோய் மூன்று நிலைகளைக் கொண்டது. தற்காலிக பக்கவாதம், தொடர்ந்து வரும் பக்கவாதம், முடிவில்லாத பக்கவாதம். இதில் முதல் நிலையான தற்காலிக பக்கவாதம், அதிக நேரம் இருக்காது, சில நிமிடங்களில் சரியாகிவிடும் என்றாலும், எதிர்காலத்தில் கடுமையான பக்கவாதத்தை ஏற்படுத்த இது ஒரு அறிகுறியாகும். இரண்டாவது நிலையில் ரத்தக்குழாய்களில் கட்டி தோன்றி, மூளையை பாதிக்கும். இது திடீரென்று பாதிப்பை உண்டாக்காது. படிப்படியாகத்தான் பாதிப்பை வெளிப்படுத்தும். மூன்றாவது நிலையான, முடிவில்லாத பக்கவாதம் மிகவும் அபாயகரமானது. ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பின் அளவிற்கேற்ப, பாதிப்பும் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.
மூளையில் காயம், கட்டி, விபத்தில் மூளை நரம்பு சேதம் போன்றவற்றால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. தவிர இளம்பிள்ளை வாதம், மூளையில் தண்டுவடகட்டி, பெருமூளை வாதம், தண்டுவட பராமரிப்பு நோய் போன்றவை இந்த நோய் தாக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. மேலும் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது, நீரிழிவு தொடர்ந்து அதிகரிப்பது, இதய நோய், இதய செயலிழப்பு, இதயத்துடிப்பு கோளாறு, அதிக கொழுப்பு, ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பது, அதிக புகை மற்றும் மது பழக்கம், மன அழுத்தம், அதிக உடல் எடை, உடல் உழைப்பின்மை போன்ற காரணிகளாலும், பக்கவாதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கினாலும், 50 வயது கடந்தவர்களையே, அதிகமாக பாதிக்கிறது. இந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். உடல் எடையை சீராக பராமரிப்பது மிகவும் முக்கியமானது. மன அழுத்தம் பாதிக்காதவாறு, உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். புகை, மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தும் வகையில்தான், ஆண்டுதோறும் அக்டோபர் 29-ந் தேதியை, ‘உலக பக்கவாத நாள்’ என்று கடைப்பிடித்து வருகிறோம்.
மாலைமலா்