Home உலகம் சிரிய அகதிகளது “ரிக்ரொக்” போர்!வாழைப்பழ வீடியோக்களால் துருக்கியில் பெரும் குழப்பம்!

சிரிய அகதிகளது “ரிக்ரொக்” போர்!வாழைப்பழ வீடியோக்களால் துருக்கியில் பெரும் குழப்பம்!

by admin

துருக்கிக்கும் அங்கு தஞ்சமடைந்துள்ளநான்கு லட்சம் சிரிய நாட்டு அகதிகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. சிரிய அகதிகளால் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகின்ற வாழைப்பழ வீடியோப் பதிவுகளே இரண்டு தரப்புகளுக்கிடையிலும் பெரும் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளன.

துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் சிரிய அகதிகளைத்தொடர்புபடுத்திக் காட்டுகின்ற இனவாத வீடியோப் பதிவு ஒன்றே அதன் பின்னர் தொடராகப் பல வாழைப்பழ வீடியோக்கள் பகிரப்படக் காரணமாகி உள்ளது.

தலைநகர் இஸ்தான்புலில் படமாக்கப்பட்டிருக்கின்ற ஒரு வீடியோக் கிளிப்பில் சிரிய அகதியாகிய மாணவி ஒருத்தி கிலோ எடை கொண்ட வாழைப்பழம் வாங்குகிறாள்.”உனக்கு ஒன்று போதும் எதற்காகக் கிலோ கணக்கில் வாங்குகிறாய் ?”என்று துருக்கிய நபர் ஒருவர் அந்த மாணவியைக் கண்டிக்கிறார் .

“இவர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று போர் புரியாமல் இங்கே சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள்” என்று பெண் ஒருத்தியும் தன் பங்குக்கு அந்த அகதி மாணவி மீது குற்றம் சுமத்துகிறார். தன்னால் சிரியாவின் எந்தப் பகுதிக்கும் இப்போது செல்ல முடியாது என்பதை விளக்க முற்படுகிறாள் அந்த மாணவி.

ஆனால் அது எவருடைய காதிலும் ஏறுவதாய் இல்லை.இது தான் அந்த வீடியோ சொல்லும் செய்தி.சிரியாவில் இருந்து தப்பி வந்தோருக்கு தஞ்சம் வழங்கிய துருக்கியர்கள் இப்போது அவர்களைத் தங்களுக்குச் சுமையாகப் பார்க்கிறார்கள். அதனை வெளிப்படுத்துகின்ற அந்த வீடியோவால் ஈர்க்கப்பட்ட இளம் சிரிய அகதிகள் துருக்கிக்கு எதிராக வாழைப்பழங்களைக் குறியீடா கக் கொண்ட பல புதிய வீடியோக்களை’ரிக்ரொக்’ (TikTok) தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

துருக்கியின் இனவெறியினால் ஆத்திரமடைந்த சிரிய இளைஞர்கள் வாழைப்பழம் சுவைக்கின்ற தங்களது சுய படங்களை வைரலாகப்பரப்பத் தொடங்கியுள்ளனர்.அகதிகளுக்கு எதிரான இனவெறியின் அடையாளமாக வாழைப் பழம் மாறிவிட்டது.

துருக்கிய அதிகாரிகளும் காவல்துறையினரும் அந்த வாழைப்பழ வீடியோக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றனர். சில இளையவர்கள் துருக்கியின் தேசியக் கொடியில் உள்ள பிறை வடிவச்சின்னத்தை நீக்கி விட்டு அந்த இடத்தில்வாழைப்பழத்தைப் பொருத்திப் படங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

கட்டுப்படுத்த முடியாமல் பரவுகின்ற இந்த சமூகவலைத்தள “வாழைப்பழ இயக்கத்தை” ஒடுக்குவதற்கு துருக்கிக் காவல்துறையினா் பலப்பிரயோகத்தைப்பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

வீடியோக்களைப் பகிர்ந்து இளம் சிரியஅகதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது நாட்டுக்குத்திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.மேலும் பலர் விசாரணை வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வாழைப்பழ இயக்கத்துக்கு ஆதரவாக கேலிச் சித்திர வீடியோ ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் துருக்கியில் வசிக்கும் சிரிய ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

நாடு கடத்தப்படும் ஆபத்தைஎதிர்கொண்டுள்ள மஜீத் ஷாமா (Majed Shama) என்ற அந்த இளம் ஊடகவியலாளரை விடுதலை செய்யுமாறு சர்வதேசமன்னிப்புச் சபையும் (Amnesty International) எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பும்( Reporters Without Borders)கோரி வருகின்றன.

இளையோரின் கைகளில் சமூகவலைத்தளங்கள் ஓர் ஆயுதமாக மாற்றம் பெற லாம் என்பதை சிரிய நாட்டு இளையோர்கள் நிரூபித்திருக்கின்றனர். சிரியா நீண்ட காலமாக உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது.போரில் குர்திஷ்மக்களை எதிர்த்துக் களம் இறங்கிய துருக்கி ஆரம்பத்தில் பல லட்சம் சிரியஅகதிகளைத் தனது நாட்டுக்குள் அனுமதித்தது.

ஆனால் அவர்கள் நீண்ட காலம்தனது நாட்டில் தங்கும் நிலைமை வரும்என்று அது எதிர்பார்க்க வில்லை. துருக்கியின் பொருளாதார நெருக்கடிகள் தற்போது அங்குள்ள சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வெறுப்புணர்வை உருவாக்கியுள்ளன.விலைவாசி உயர்வுக்கும் தொழில் இழப்புகளுக்கும் வெளிநாட்டு அகதிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.

——————————————————————– –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 06-11-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More