கடல் நீர்மட்டம் உயருவதன் காரணமாக வெள்ள நீர் வடிந்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதேவேளை கடல் சீற்றம் அதிகமாக உள்ளமையால் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் , கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலரின் ஊடக சந்திப்பு இன்று(9) யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. மிகக்குறுகிய காலத்திலேயே மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது. அனேகமான வீதிகள்,வீடுகள்,பொது இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போதைய நிலையில் சேத விபரங்களை மதிப்பீடு செய்து வருகின்றோம். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றார்கள். வெள்ள நிலைமை காரணமாக நாங்கள் இன்று காலையில் பாடசாலைகளை ஆளுநரின் அனுமதியுடன் மூடுவதற்கு தீர்மானித்திருந்தோம்.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் உட்பட ஏனைய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் செய்து வருகின்றனர்.
நீர் நிலைகள் பல நிரம்பியுள்ளதன் காரணமாக சிறுவர்களை மிகப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.
கடந்த காலங்களில் இவ்வாறான நேரங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டிருந்தது. அவற்றை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெரியப்படுத்த பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபையினரை கேட்டிருக்கின்றோம்.
மேலும் இந்த வெள்ள நிலைமை தொடர்ந்து ஏற்படுமிடத்து சுகாதார நிலையை கவனத்தில் எடுத்து அதற்கான முன்னாயத்தம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி சபையுடன் இணைந்து வெள்ள நிலைமையை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
பொதுமக்கள் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவேண்டும்.
கடல் நீர்மட்டம் உயருவதன் காரணமாக வெள்ள நீர் வடிந்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. தொண்டமானாறு நாவற்குழியில் உள்ள தடுப்பணைகள்கள் திறந்து விடப்பட்டு நீர் வழிந்தோட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் வடிகால்களை சுத்தப்படுத்தி நீர் வழிந்தோடத்தக்க வகையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிலைமை ஓரிரு நாட்களுக்கு தொடரலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் இயற்கை அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை கடல் சீற்றம் கடலுக்குச்அதிகமாக காணப்படுவதனால் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கரையோர மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்தார்.