ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக, யுனிசெப் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.20 வருடங்கள் கழித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் தலிபான்கள்.. இப்போதைக்கு அங்கு, தற்காலிக அரசு அமைப்பட்டிருந்தாலும்கூட, ஏகப்பட்ட குழப்பங்களும் சர்ச்சைகளும் அங்கு நடைபெற்று வருகின்றன.
பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என தலிபான்கள் வாக்குறுதியளித்திருந்த போதிலும் அதற்கான அறிகுறிகள் இதுவரை காணப்படவில்லை.. அமைச்சரவையிலும் பெண்கள் இல்லை.. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை..
ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து கற்க அனுமதி இல்லை.. குழந்தைகளுக்கான பாடசாரைலகளும் திறக்கப்படவில்லை.. மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது..
அத்துடன் நாடே வறுமையிலும் பட்டினியிலும் சிக்கியுள்ளது.. ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேலான 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மை மற்றும் பட்டினியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்..
பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.. குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்… மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்… நிலைமை ரொம்ப மோசமாக போகிறது.. மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐநா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே, ஆப்கன் மக்கள் வேலையில்லாமலும், உணவு இல்லாமலும் மிகவும் சிரமப் வருகின்றனர். கடுமையான நிதி நெருக்கடிக்கு அந்த நாடு ஆளாகி உள்ளது.. மேற்கத்திய நாடுகளும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் ஆப்கானிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்திவிட்டன..
இதனால், நிதி நிலைமை மோசமாகிவிட்டதனால், உணவுக்கு வழியில்லாமல் பெற்றோர் தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
அதேபோல, சிறுமிகளை வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடுமையும் நடைபெற்று வருகின்றது. .. பாக்திஸ் மாகாணத்தில் அப்துல் மாலிக் என்பவர், தன்னுடைய 9 வயது பெண் குழந்தையை, 55 வயதுடைய ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.. இதேபோன்று அதே குடும்பத்தில் ஏற்கனவே, 12 வயது மகளை, வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்..
இந்நிலையில், யுனிசெப் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பால் வேறு 3 குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இத்தனை குழந்தைகள் வெறும் 6 மாத காலத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது கவலை அளிப்பதாகவும், வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த வைத்தியா் முகமது பாஹிம் என்பவர் தெரிவித்த தகவல் மேலும் உலக மக்களை நிலைகுலைய வைத்துள்ளது