அனுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக மல்வத்து ஓயா நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் நானாட்டான், மடு மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதன் கிழமை மதியம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உயர் மட்டக் குழுவினர் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் நீர்வரத்து பிரதான ஆற்றுப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதை அடுத்து அவசர நிலையை அவதானிக்கும் நோக்கோடு குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்த குழுவினர் கனமழை காரணமாக மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து 10 அடி 6 அங்குலம் ஆக தேக்கம் ஆற்றில் நீர்வரத்து பிரதான பகுதியில் பாய்ந்து கொண்டிருக்கின்றதை அவதானித்துள்ளனர்.
குறித்த அளவு நீர்வரத்து காரணமாக அவசர நிலையை அறிவித்துள்ளதுடன் அதிகாலை 3 மணிக்கு தந்திரி மலை நீர் மட்டமும் உயர்ந்து காணப்பட்டது. தன் தொடர்ச்சியாக தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் நீர்வரத்து பிரதான ஆற்றிலும் தொடர்ச்சியாக கூடிக் கொண்டு காணப்படுகிறது.
நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதினால் மடு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.