ஜேர்மனியில் தொற்று உச்சம்
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தஎட்டு நாட்டவர்கள் பிரான்ஸ் வருவதற்கான கட்டுப்பாடுகளை அரசு இறுக்கிஉள்ளது. ஜேர்மனி,ஒஸ்ரியா,பெல்ஜியம், கிறீஸ், ஹங்கேரி, அயர்லாந்து,நெதர்லாந்து, செக் குடியரசு ஆகியநாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி ஏற்றாதபயணிகள் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கு 24 மணிநேரத்துக்குள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனைச்சான்றிதழ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்திய நடைமுறையின் படி பரிசோதனையின் கால அவகாசம் 72 மணித்தியாலங்களாக இருந்தது. தற்போது அது 24 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இந்த நாடுகளில் வைரஸ் தொற்றுக்கள் தீவிரமாகி வருவதை அடுத்தே புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் மிக உச்ச அளவாக 24மணி நேரங்களில் 50 ஆயிரம் பேர் தொற்றாளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கோவிட் வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் பதிவாகின்ற அதிகூடிய ஒரு நாள் தொற்று எண்ணிக்கை(50,196) இது என்று கூறப்படுகிறது.
தொற்றுக்களின் வேகம் சுகாதார அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் உஷாரடைய வைத்துள்ளது.தடுப்பூசி ஏற்றிக் கொள்வதைத் தூண்டும் விதமாக மக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பேர்ளினில் உணவகங்கள், சிகை அலங்கரிப்புநிலையங்கள், ஜிம் போன்ற பொது இடங்களில் சுகாதாரப் பாஸ் கட்டுப்பாடுகள்அமுலுக்கு வந்துள்ளன.
இதேவேளை, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்,”நாடு ஐந்தாவதுதொற்று அலையின் தொடக்கத்தில்உள்ளது” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
பொது இடங்கள், மற்றும் பயணங்களில் சுகாதாரச் சான்றிதழ் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றுஉள்துறை அமைசர் கூறியிருக்கிறார்.கடந்த செவ்வாயன்று அரசுத் தலைவர்ஆற்றிய தொலைக்காட்சி உரைக்குப்பின்னர் மூன்றாவது தடுப்பூசி பெறுவதற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கைமிக வேகமாக உயர்ந்து வருகிறது.நேற்றுப் பகல் வரை 214,000 பேர் தடுப்பூசி ஏற்றுவதற்கான முன்பதிவுகளைச்செய்துள்ளனர் என்று Doctolib இணையத்தளம் தெரிவித்துள்ளது.
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.11-11-2021