கழிவறைக் காத்திருப்பு
சுற்றிய கம்பிக் கூட்டுக்கு
நடுவில் என் வசிப்பிடம்
இரத்தம் படிந்து முட்கள்
முழுவதுமாக தைக்கப்பட்ட ஆடை
விழித்திருக்கும் கண்களுக்குள்
வெளிச்ச மற்ற இருளின் தொடர்ச்சி
ஒருமித்த உணர்வுகளும்
உருக்கொண்டாடும்
பித்தர்களைப் போன்ற கனத்த மனம்
எதிர்த்துக் கதைக்க
இயலாத ஊமை போன்று
இழுத்துத் தைக்கப்பட்ட வாய்
நெருப்பில் வெந்த கம்பிச் சூட்டில்
சுருண்டு கிடந்த சுவையற்ற நாக்கு
எழுந்து நடக்க இயலாத
இறுகிய கம்பிப் பின்னல்களினால்
கட்டப்பட்டிருக்கும் கால்கள்
தீட்டப்படாத கூரிய ஆயுதம் கொண்டு
கிழித்தெடுக்கப்பட்ட நகம்
இரத்த உறைவில் சுருங்கிப் போயிருக்கும் உடல்
மீதமாய் இருக்கும் உயிரைத்
தக்க வைத்துக் கொண்டு காத்திருக்கிறேன்
பறிக்கப்பட்ட என் காணி நிலம் வேண்டும் என்று.!!!!
(முல்லையின் ஹர்வி)
‘உருவப் பொம்மை’
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம்பெண் என்று
எத்தனை பேருண்டு உனக்கு
அத்தனைக்குள்ளும் இருக்கும்
அர்த்தம் – நீ
பார்த்திந்தப் பெயர் வந்ததா
இல்லைப் பார்வைக்கு மட்டுமா ???
விதி வகுத்த பெயர்களில் அநேக
மாற்றுப் பெயர்கள் உனக்கு மட்டும்
கரு நீலக் கறுப்பி
கரி குழற்க்காரி கன்னக் குழியழகி
சிரிப்பிற்கு குறைவில்லா சிவந்த வாய்க்காறி
பிஞ்சு விரல்கள் கோர்க்கும் பஞ்சு மூக்குக் காறி
ஆசைக்கு கொஞ்சற் பெயர்கள் – நீ பிறந்த வேளையில்
வாலிப உன் உடம்பு வளர்ந்தாகும் அல்லவா ???
வித்தாக வேண்டும் என்ற போட்டிப் பரீட்சை,
பல கோடி மாப்பிள்ளையில் – பலன் எதிர்பாக்காதவனாம்
உனக்காக பிறந்த உத்தமன் என்று –
ஊரெல்லாம் ஒரே பேச்சு !
நாளிகை குறித்தாகப் பட்டுள்ளது
படிப்பை நிறுத்த!!
விரும்பாத மஞ்கள் கயிறு தூக்குக் கயிறாகி
கழுத்தில் தொங்கிக் கொண்டதும்
அக்கினி வலம் வருகை…….
கட்டாக் காலியை கரைசேர்க்க
சுந்தர வதனத்து சீமந்தப் பகிர்ந்தளிப்பு
வரதட்சனையாக கோடிப் பொறுமதி
பேசும் – உன் உடல் !!!!!
சேர்வுடல் தீண்டத்தில்
ஆண்டு ஒன்று கடந்த மாதத்திலே
பிள்ளை இல்லாத மலடி
நீ யென்று மாமியார் வைத்த முதற் பெயர்
தென்னைக் கள்ளுச் சீவ வந்தவனுக்கு
விக்கல் தீர்த்த தண்ணி கைக்கு
பக்கத்து சனம் கொடுத்த மற்றப் பெயர் -வேசை
புழு பூச்சி இல்லாத புண்பட்ட
மேனியை தீண்டாத
மோகத்தின் குறைத் தீனிக்கு
பக்கத்து படுக்கைகளின்
நாட்டத்தில் -அவன்
கூலிக் காசின் குதூகலத்தில்
நச்சீரல் கருகிப் பொல்லா நோயொன்று
காவு கொண்டோடவும்
நாசமாப் போனவள் வந்து
பிள்ளையைக் கொண்டிற்றாள், – தரித்திர மூதேசி
மறு பெயரும் உனக்குத்தான் !!!!
சவப் பெட்டி முன் அழுத நாளிலிருந்து
தொலைக்கப்பட்ட வீட்டுச் சாவியின்
பூட்டறையில் இவளுக் கெனத்தனியறை
வீட்டுக்கு விளங்காத – சகுனி
சமூகத்தால் திணிக்கப்பட்டுப் புதுப் பெயர்
வாட்டமுறு வதனத்தின் – மதங்கி
மஞ்சட்க் கயிறவிழ்த்த- மாயோள்
தலை மழித்த – வனிதை
முக்காட்டுப் போர்வை – வஞ்சி
திலகப் பொட்டளித்து
சந்தனத் தூரிகையின் துலா-விறலி
உடன் கட்டை ஏறாத உருவ – நாரி
பட்டற்ற வெண்ணிற உடையின் – பாவை
தலை வாராக் கொண்டைக்கு
நிறமற்ற பூத்தேடும் – காந்தை
மங்கள நாள் ஒதுக்கும் – வஞ்சனி
தெருக்கானா – மகடூ
கணவன் தொலைத்த – விதவை
அடுப்பங்ரையின் – அங்கனை
எத்தனை பேருண்டு அத்தனையும்
உனக்கு மட்டும் தான்
இத்தனை பேர் தந்த பின்னும்….
இரண்டு பிள்ளைக்காரன் – இன்னொரு தாரம்
உனக்காய் இருக்குதாம்
விரும்பினால் மீண்டும்; சுமை தாங்கு
என்கிறார்கள் – நீ என்ன நினைக்கிறாய் ??????
(முல்லையின் ஹர்வி)