(க.கிஷாந்தன்)
2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.
நுவரெலியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தொிவித்த அவர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.
உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளாா்.
இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் தொிவித்த அவா் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய காவல்துறையினரைரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளாா்.