கனடா நாட்டின் வன்கூவரில் நூற்றாண்டிலேயே முதல் முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வீசி வரும் கடுமையான சூறாவளி, வன்கூவரைச் சுற்றியுள்ள சா வீதிகள் மற்றும் புகையிரத போக்குவரத்து இணைப்புகளை துண்டித்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கடலோர நகரான வன்கூவரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான வெள்ளத்தால் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவா் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது இருவரைக் காணவில்லை எனவும் மீட்புப் பணியாளர்கள் தொிவித்துள்ளனா்.
கடந்த திங்கள்கிழமை வீசிய மிகப்பெரிய சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குடியிருப்புகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மாதாந்திர சராசரி மழைப்பொழிவை வெறும் 24 மணி நேரத்தில் கொட்டியதால் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வன்கூவரில் இருந்து வடகிழக்கே 120 மைல் தொலைவில் உள்ள மெரிட்டில் வசிக்கும் 7,000 பேர் திங்கட்கிழமையன்று அவா்களது வீடுகளை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டிருந்தனா் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழ அங்கு பனி உறைந்த வெள்ளத்தில் கார்கள் மிதப்பதைக் காண முடிந்ததாகவும் துண்டிக்கப்பட்ட வீதியில் சிக்கிய சுமார் 300 பேரை மீட்க உலங்குவானூா்தி குழுவினர் மலை நகரமான அகாசிஸுக்கு அனுப்பப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
கனடாவின் மிகப்பெரிய துறைமுகம் வன்கூவரில் உள்ள நிலையில் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்து புகையிரத போக்குவரத்தையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில்தான் பிரிட்டிஷ் கொலம்பியா, கோடையின் தீவிர அனல் காற்றால் 500க்கும் அதிகமான மக்களை பறிகொடுத்திருந்தது. அங்கு காட்டுத்தீயால் நகரின் பல இடங்கள் அழிந்த நிலையில், தற்போது மழை, புயல் ஏற்பட்டுள்ளது