அடுத்த மாதம் நடத்த இருக்கின்ற உலகளாவிய “ஜனநாயகத்துக்கான மாநாட்டுக்கு” (Summit for Democracy) அழைக்கப்படவுள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இலங்கையின் பெயரையும் அந்தப்பட்டியலில் காணவில்லை. ஆனால் தைவானின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது.
உலகெங்கும் ஜனநாயக சக்திகளோடு அணிசேர்வதை இலக்காகக் கொண்டுஅதிபர் ஜோ பைடன் கூட்டுகின்ற இந்தமாநாட்டில் 110 நாடுகளது பிரதிநிதிக்குழுக்கள் கலந்துகொள்ளவுள்ளன. டிசம்பர் 9-10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த மெய்நிகர் மாநாட்டிற்காகத் தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு அனுப்பி இருப்பது சீனாவை சீற்றமுறவைத்துள்ளது. மாநாட்டுக்கு சீனா அழைக்கப்படவில்லை.தைவானுக்கு சர்வதேச மேடைகளில் சுதந்திர தேச அந்தஸ்த்துக்குரிய தளங்களை வழங்குகின்ற முயற்சிகளில்அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
அதனால் சீனாவுடன் போர்ப்பதற்ற நிலைமை உருவாகிவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரேயொரு நாடாக ஹங்கேரிக்கு மட்டும் அழைப்புவிடுக்கப்படவில்லை. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளையும் அமெரிக்கா புறமொதுக்கியுள்ளது. சர்வாதிகாரப்பாணியில் அரசாட்சி நடைபெறுகின்ற நாடுகளையே அமெரிக்கா தனது மாநாட்டுக்கு அழைக்காமல் புறக்கணித்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் சில குறிப்பிட்டுள்ளன.
” எதேச்சாதிகாரத்தில் இருந்து பாதுகாத்தல், ஊழலுக்கு எதிராகப் போராடுதல்,மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பை ஊக்குவித்தல்”(defending against authoritarianism, fighting corruption, and promoting respect for human rights) ஆகியமூன்று முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு கூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.26-11-2021