விடுதலைப் புலிகளை தடைப் பட்டியலில் தொடர்ந்து பேணுவது சட்டத்துக்கு முரணானது எனவும், வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல, விசேடமாக 2009ல் யுத்தம் முடிவின் பின் அவர்களது போராட்டம் அறம்சார்ந்தது போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து விவாதங்களையும் நிராகரித்ததோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் வழக்குத் தொடுனர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட 4விடயங்களையும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை ஐரோப்பிய கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பிய விடயங்களையும் முன்னிறுத்தி உள்ளது. அதில்,
- விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.
- பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.
- பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.
- விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.
- விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.
இத்தகைய பின்னணியில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.