சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எனினும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற ஊறுப்பினா்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி குளிர்காலக் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்ற மக்களவை கூடியதும், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஓரிரு நிமிடங்களில் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புதல் வழங்கப்பட்டாலும், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான சட்டப்பூர்வ உறுதிமொழியை வழங்கிய பின்னரே போராட்டம் முடிவடையும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைத் தொிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது, அந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த 750 விவசாயிகளுக்கு சமர்ப்பணமாகும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.