யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கடற்படையினர் தமது வீட்டுக்கு வருகைதந்து காணியினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து கையொப்பம் வைக்குமாறு கேட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளனர். இதன்போது கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
காணியினை அளப்பதற்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
தொடர்ந்தும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கடற்படை முகாமிற்கு முன்பு அமர்ந்து இருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துயதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த இளவாலை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடினர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் இரண்டாம் திகதி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைந்து கலந்துரையாடுவதாக வாக்குறுதி வழங்கியரை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.