Home இலங்கை பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், அவர்களது நலிவை விளங்கிக் கொள்ளுதலும்! யது பாஸ்கரன்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், அவர்களது நலிவை விளங்கிக் கொள்ளுதலும்! யது பாஸ்கரன்.

by admin

இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பாதிப்புகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் கொள்ளும் சவால்களும் நெருக்கடிகளும் இன்று அவர்களை பெரும் பொருளாதார நெருக்களுக்குள் தள்ளியுள்ள அதே நேரம் சழூகத்தால் அவர்கள் மீது ஏற்படுத்தப்படுகின்ற உடல் உள ரீதியான நெருக்குதல்கள் தற்கொலை வரை கொண்டு செல்லுகின்றது.


இவ்வாறான நெருக்குதல்களிலிருந்து இவர்களை பாதுகாப்பதற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் காணப்படுகின்றது. 2018ம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சுமார் 63 ஆயிரத்து 345 க்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருப்பதாக கடந்த வடக்கு மாகான மகளீர் விவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிட்டிருந்தன. கடந்த கால யுத்தத்தினால் கணவணை இழந்த அல்லது காணாமல் போன. கணவனால் கைவிடப்பட்டவர்கள் என அதிகளவான இளம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன என பெண்கள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.


இலங்கையில் மட்டுமல்லாது பொதுவாகவே பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் சுய பொருளாதாரத்தில் அவர்கள் தாங்கி நிற்கக் கூடிய ஒரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் இன்று வரைக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அல்லது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வருடந் தோறும் வழங்கி சென்ற போதும் அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்கள் அல்லது சந்தை வாய்ப்புகள் அல்லது சந்தை வாய்ப்புகளை ஏற்ப்படுத்திக் கொடுத்தல் என்பன இல்லாத காரணத்தால் பாரிய பின்னடைவுகளை சந்தித்து அவர்கள் மீளவும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளதள்ளப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.


தற்போது ஒருஇலட்சத்து 47ஆயிரத்து 421 பேர் வாழ்ந்த வரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து 52 பெண்தலைமைத்து குடுமபங்கள் கானப்படுவதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகால யுத்த பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. ஒரு தனியார் துறையின் கீழ் வேலை செய்தல் என்பது பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு பாரிய பிரச்சனை அதாவது அவர்களுக்குரிய வேதனம் கிடைக்காமல் அல்லது அவர்கள் நீண்ட நேரம் வேலைக்கு அமர்த்தப்படுதல் என பல்வேறுபட்ட நெருக்குதல்கள் இவற்றுக்கும் மேலான அவர்கள் மீது உடல் உள ரீதியான பாலியல் துன்புறுத்தல்கள் என பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகின்றன.


இந்த நிலைகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாடு ஒவ்வொருவரிடத்திலும் வளர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சுயமாக தங்களது சொந்தக்காலில் நிற்க கூடிய வகையில் அவர்களுக்கு ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துகின்ற வகையில் பல்வேறு தொழில் முயற்சிகளை எடுத்து இருக்கின்றார்கள். குறிப்பாக ஆடைகளை உற்பத்தி செய்தல் அல்லது ஆடைகள் தைத்தல் என உள்ளுர் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளுர் உற்பத்திப் பொருட்களை பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்தல். மா வகைகள் அரிசி மற்றும் தூள் வகைகள் என்பவற்றை உற்பத்தி செய்திருந்தாலும் அவற்றை சந்தைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன.


இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்து பல பெண்கள் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது பெரும் தொழில் முயற்சியாளர்களாக தொழில் வாய்ப்பை வழங்குணர்களாக காணப்படுகின்றனர். தற்போதும் கூட கிராம மட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளோடு சில சிறு தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதாவது காளான் வளர்ப்பு கோழி வளர்ப்பு போன்ற சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றிற்குரிய சந்தை வாய்ப்பு கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறி.
ஒரு பெண் தலைமைத்துவ குடும்பம் தோட்டச்செய்கையில் உற்பத்தியாகின்ற மரக்கறிகளை கூட சந்தைப்படுத்த கூடிய வசதி கூட அவர்களது கிராமங்களிலே இல்லை அதாவது அவர்கள் அந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லுகின்ற போது மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்தல் அல்லது தரமற்ற பொருட்கள் என தட்டிக் கழித்தல் காணப்படுகின்றது. இவ்வாறு அதனை தட்டிக்கழிக்கும் போது அவர்கள் மனமுடைந்து அவர்கள் கொண்டு செல்லும் பொருளை அவர்கள் கேட்கின்ற விலைக்கே விற்பனை செய்கின்ற நிலை காணப்படும் இதனால் அந்த தொழிலை செய்வதற்கு அவர்கள் முயற்சிப்பதில்லை ஏனெனில் எங்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பது இல்லை அப்படியானால் இவ்வாறு பொருட்களை உற்பத்தி செய்வதில் என்ன இலாபம் என்று கூட அவற்றை கைவிடுகின்றனர்.


சில பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இன்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களாக இணைந்து நீண்ட காலமாக தொழில் செய்து அவர்கள் கிடைக்கின்றன சம்பளத்தை வைத்து ஏதோ தங்களுடைய குடும்ப பொருளாதாத்தை குடும்ப வாழ்க்கை செலவை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள் மாதாந்தம் எடுக்கின்ற வேதனத்தை அவர்கள் தங்களுடைய வாழ்க்கைச் செலவுக்கு ஆகவே பயன்படுத்துகின்றார்கள் அவர்களுடைய எதிர்காலத்துக்கு அது போதாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இன்று பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது இதனால் அவர்களுடைய நாளாந்த வருமானம் அல்லது மாதாந்த வருமானம் அவற்றுக்கு செலவாகி விடுகிறது.


இது இவ்வாறு இருக்க இன்று பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் ஏனைய பிரதேசங்கள் பனை ஓலை பொருட்களை உற்பத்தி செய்து விட்டு அவற்றை கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. என குறித்த தொழில் முயற்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சேதனப்பசளை உற்பத்தி செய்கின்ற ஒரு செயற்பாட்டை ஊக்குவித்து தரமான சேதனப்பசளை உற்பத்தி செய்வதைக்கூட ஊக்குவிக்கலாம்.


குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடு நகர் ஆகிய இடங்களில் அதிகளவான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன இவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். அண்மையிலே ஒரு காளான் உற்பத்தியில் ஈடுபடும் பெண் ஒருவரை தொடர்புகொண்டு அவரிடம் பேசிய போது அவர் சொன்ன விடயம் தன்னிடம் இருக்கின்ற காளானை வெளியில் கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாத ஒரு சூழல் காணப்படுகின்றது.


காரணம் வெளியில் கொண்டு சென்றால் நல்ல சந்தை வாய்ப்பு இருக்கின்றது ஆனால் அதை கொண்டு செல்வதற்கான வசதி தன்னிடம் இல்லை நாளாந்தம் தனது கிராமத்திலுள்ள அயலவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு குறைந்த விலையில் வழங்கி வருவதாகவும் அது தன்னுடைய உற்பத்திக்கும் சந்தை வாய்ப்புக்கும் நிறையவே வேறுபாடு காணப்படுகின்றது என்று குறிப்பிட்டார். இது போல நீண்டகாலமாக கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்ற ஒருவரோடு தொடர்பு கொண்ட போது என்னால் இந்த கோழி வளர்ப்பை மேற்கொள்ள முடியவில்லை காரணம் சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினை இருக்கிறது. ஆகவே இதை பெரிய அளவில் செய்வதற்கு அல்லது கஷ்டமாக இருக்கிறது இதற்காக நேரத்தைச் செலவழித்து அதில் வருகின்ற வருமானம் என்பது மிகக் குறைவு ஆகவே நானும் நாளாந்த கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


ஒரு இதைவிட மிளகாய் தூள் உற்பத்தி அரிசிமா என்பவற்றை மாவாக்கி அவற்றை பொதி செய்து விற்பனை செய்து அவற்றை இப்போது கைவிட்டுள்ள முயற்சியாளர் ஒருவரை தொடர்புகொண்டு வினவிய போது தனது உற்பத்திப் பொருட்களை உள்ளுர் கடைகளையே அவற்றை விற்பனை செய்ய முடியாது காரணம் உள்ளுர் உற்பத்திப் பொருள் என்பதால் அதனுடைய பொதி செய்தல் வடிவமைப்பு தரமில்லை ஆனால் மிகவும் தரமான பொருளாக இருக்கின்றது. தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற அல்லது வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு கவர்ச்சிகரமாக பொதி செய்யப்பட்டு இருக்கிறது அவற்றை மக்கள் வாங்கி பயன் படுத்துகிறார்கள். இந்தப் பொருட்களை யாரும் விரும்பி வாங்குவதில்லை நமக்கு உள்ளுரில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெரிவித்தார்.


பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை சரியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் அல்லது மேலும் முதலீடுகளை செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது என பல்வேறுபட்ட பிரச்சினைகளால் பெண்கள் பின் நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இவற்றிற்கு சரியான சந்தை வாய்ப்பு சரியான நெறிப்படுத்தல் என்பது மிக முக்கியமானதாக அமைகின்றது ஆகவே கிராமப்புறங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அவர்களது நலிவு தன்மைகளை விளங்கிக் கொண்டும் இவ்வாறான பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்காத நிலையில் இவ்வாறான பெண்கள் தங்களை சுரண்டப் படுகின்ற தொழில்களில் ஈடுபடும் நிலை ஏற்படும் இதனால் மேலும் அவர்கள் நலிவடைதுடன் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை போன்ற சட்டவிரோத தொழில்களுக்குள் செல்வதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.


இதனால் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன அத்துடன் பொருளாதாரமும் இழக்கப்படுகின்றது ஒரு நேர்த்தியான திட்டமிடல்கள் இல்லாது வாழ்வாதார உதவிகளை கொண்டுவருவதையோ அல்லது குறுகிய காலத்துக்கு இவ்வாறான உதவிகளை வழங்குவதோ விடுத்து இதனை முழுமையாக ஆராய்ந்து அவர்களுக்கு உதவும்வகையில் வாழ்வாதர உதவிகளை முன்னெடுக்க வேண்டும் என்துடன் இவ்வாறான செயற் திட்டங்களை நீண்ட காலத்திற்கு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More