ஜேர்மனியின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த இணங்கியுள்ளன. அதன்படி தடுப்பூசி ஏற்றாதவர்களுக்குப் பல தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் வானவெடி வேடிக்கைகள் மற்றும் களியாட்டநிகழ்வுகள் முற்றாகத் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு மற்றும் களியாட்டங்களுடன் தொடர்புடைய விபத்துக்களில் காயமடைபவர்களால் மருத்துவமனைகளுக்கு ஏற்படக்கூடிய நெருக்குதல்களைத் தவிர்ப்பதற்காகவே வெடி கொளுத்திப் புதுவருடத்தைக் கொண்டாடுவதைத் தடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சான்சிலர் அங்கெலா மெர்கல் மற்றும் அடுத்தவாரம் பதவியேற்கவுள்ள புதிய சான்சிலர் ஓலாஃப் சோல்ஸ் ஆகிய இருவரும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் நாட்டின் 16 மாநிலங்களினதும் தலைவர்களோடு இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நாட்டில் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதற்காக அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகம், அருந்தகம் , அருங்காட்சியகம், சினிமா மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் தடுப்பூசி ஏற்றியோரும், தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து மீண்டவர்களுமே அனுமதிக்கப்படுவர்
.ஒரு லட்சத்துக்கு 350 பேர் என்ற வீதத்தில் தொற்று உள்ள பகுதிகளில் இரவுவிடுதிகள், இசை அரங்குகள் மூடப்படும்
உதைபந்தாட்ட அரங்குகளில் ஆகக்கூடியது 15 ஆயிரம் பார்வையாளர்களேஅனுமதிக்கப்படுவர்
தடுப்பூசி ஏற்றாதவர்கள் தாங்களும் வேறு இரண்டு பேரும் மட்டுமே வீடுகளுக்குள் ஒன்று கூடமுடியும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2ஜி, 3ஜி கட்டுப்பாடுகளுடன் தேவைக்கு ஏற்பபுதிய விதிகளை அந்தந்த மாநிலங்கள்அமுல்செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தொற்றின் உச்சக் கட்டத்தை எதிர்கொண்டுள்ள ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 388 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார்74 ஆயிரம் புதிய தொற்றுக்கள் பதிவாகிஉள்ளன.
பேர்ளின் உட்பட பல பகுதிகளில் ஒமெக்ரோன் தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் சுமார் 68 சதவீதமானவர்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அங்கெலா மெர்கலும் புதிய சான்சிலர் ஓலாஃப் சோல்ஸும் தடுப்பூசியை தேசிய அளவில் கட்டாயமாக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றனர்.
அதற்கான சட்டமூலம் ஒன்றைஅடுத்த ஆண்டு பெப்ரவரியில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் இது போன்ற ஒரு சட்டம் ஒஸ்ரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் வேளை நெருங்கிவிட்டது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்(Ursula von der Leyen)சில தினங்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார்.
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.03-12-2021