பொதுமக்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தவேண்டும். அவர்கள் மூலமே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவுகளை மேற்கொண்டு தேர்தலை விரைவாக நடத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. மாகாணசபைகளுக்கான செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது. அது அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படுகின்றது. அங்கு ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரமே இல்லை.ஆனால் அவர்கள் இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு.
பழைய முறையிலோ புதிய முறையில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என நாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.பொதுமக்கள் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தவேண்டும். அவர்கள் மூலமே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவுகளை மேற்கொண்டு தேர்தலை விரைவாக நடத்த முடியும். நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் 40 யோசனைகளை முன் வைத்துள்ளோம்.
அவற்றில் சிறைச்சாலைகளில் விசேட வாக்களிப்பு முறை, அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு முற்கூட்டிய வாக்களிப்பு முறை, செயற்படாத மக்கள் பிரதிநிதிகளை மீள அழைத்தல், உள்ளூராட்சி மன்றத் காலப்பகுதியை நீடிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் வயோதிபர்களுக்கு வீடுகளில் வைத்தே வாக்குகளை செலுத்தும் ஏற்பாடு, இளைஞர்களுக்கு கட்டாய கோட்டா முறை,தேர்தல் பிரச்சார செலவீன ஒதுக்கீடு தொடர்பில் கட்டுப்பாடு, வேட்புமனுவில் ஏற்படும் நுட்பத்தவறுகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமளித்தல், தேர்தல் பிணக்குகளை தீர்க்க தேர்தல் நியாய சபையை உருவாக்குதல் போன்ற காணப்படுகின்றன.
பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக தங்களது யோசனைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்வைக்க முடியும் என்றார்