கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களை கடற்படையினர் கஞ்சா கடத்தினார்கள் என பொய்க்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளதாக , அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.
மாதகல் கடற்பரப்பில் நேற்றைய தினம் சுமார் 276 கிலோ கஞ்சா கடலில் மிதந்து வந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டது. அந்நிலையில் அதனை கடத்தி வந்தவர்கள் எனும் சந்தேகத்தில் இருவரை கைது செய்திருந்தனர்.
அவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் கடந்த தினங்களில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் , அதனால் அவர்களை பழிவாங்கும் நோக்குடன் கஞ்சா கடத்தினார்கள் என கைது செய்துள்ளனர் என கைதாகியுள்ள இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
குறித்த இருவரும் நேற்றைய தினம் கடலுக்கு தொழிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் அவர்களை வழிமறித்த கடற்படையினர் , கடலில் மிதந்து வந்த கஞ்சாவை கடத்தி வந்தது இவர்கள் தான் என கைது செய்துள்ளனர்.
அவர்கள் தொழிலுக்கு சென்று திரும்பிய படகு சிறிய ரக படகு அதில் 270 கிலோ கஞ்சாவை கொண்டு வர முடியாது. அத்துடன் படகில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதனடிப்டையில் , அவர்கள் எவ்வளவு தூரம் கடலுக்குள் சென்று வந்தார்கள் , இப்பகுதிக்கு சென்று வந்தார்கள் போன்ற விடயங்களை அறிய முடியும்.
அதேவேளை அவர்களை கைது செய்யும் போது , “நீங்கள் தானே போராட்டம் நடத்துறனீங்க ” என கேட்டு அவர்களை கடற்படையினர் தாக்கியும் உள்ளனர். என தெரிவித்தனர் .