குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டதாக விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்து விட்டதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது. குரூப் கேப்டன் வருண் சிங், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் நொறுங்கியது!
December 8, 2021 9:06 am
இந்தியாவின் முப்படைத் தளபதியும் பிரதம பாதுகாப்பு துறை அதிகாரிமான பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தரையில் விழுந்து நொறுங்கியதில் அவரது நிலைகுறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் மலை முகட்டில் விழுந்து நொறுங்கியது இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், உயர் ராணுவ அதிகாரிகள் நால்வர், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான எம்.ஐ ரக ஹெலிகாப்டர் கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்றபோது காட்டேரி பார்க் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், பிபின் ராவத்தின் நிலை குறித்து அறிவிக்கப்படவில்லை. குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் சுமார் 1 மணி நேரமாக எரிகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ, கோவையில் இருந்து மருத்துவர்கள் குன்னூருக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.