Home இலங்கை அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்? நிலாந்தன்.

அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்? நிலாந்தன்.

by admin

கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான ஒரு குழு கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை வடக்கிற்கு வருகை தந்தது. அவர்கள் எங்கே போனார்கள் யாரை கண்டார்கள் போன்ற விபரங்கள் ஏற்கனவே செய்திகளாக வந்துவிட்டன. இச்செய்திகளுக்கு அப்பால் இதுபோன்ற விஜயங்களின் ராஜதந்திர இலக்குகளை-diplomatic objectives-உய்த்துணரும் விதத்தில் அண்மைக்கால சம்பவங்கள் சிலவற்றை தொகுத்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமது வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் பெருந்தொற்று நோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். எனினும் அவர் வடக்கிற்கு வருகைதந்த காலகட்டம் எதுவென்று பார்த்தால் அது பின்வரும் விவகாரங்களின் தொகுப்பாகக் காட்சி தருகிறது.

முதலாவது தமிழக மீனவர்களால் ஈழத்தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி அதுதொடர்பாக வாதப்பிரதிவாதங்கள், உயர்மட்டச் சந்திப்புகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது.குறிப்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது மீனவர்களுக்கு ஆதரவாக கடல்வழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த சில கிழமைகளின் பின் சீனத் தூதரகக் குழு வடக்கிற்கு வந்திருக்கிறது.இங்கே அவர்கள் மீனவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் நிவாரணப் பொதிகளையும் வழங்கியிருக்கிறார்கள்.அதாவது இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு சீனா நிவாரணம் வழங்குகிறது. இவ்வாறு வடபகுதி மீனவர்களுக்கு சீனா நிவாரணம் வழங்குவது என்பது இதுதான் முதல் தடவை.

இரண்டாவது விவகாரம் யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சீனா நிர்மாணிக்கத் திட்டமிட்டிருக்கும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள்.இம்மூன்று தீவுகளிலும் சீனா மின்சக்தி திட்டங்களை நிர்மாணிக்குமாக இருந்தால் அது இந்தியாவின் தெற்கு மூலையில் இருந்து கிட்டத்தட்ட 50 கிலோ மீற்றர் தூதரத்திற்கு சீனா வந்துவிட்டதைக் குறிக்கும். அதுகுறித்து அரசியல் விமர்சகர்களும் குறிப்பாக தமிழக யூடியூப்பர்களும் அதிகமாக விவாதித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று வெளிப்படையாக காணப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது.

அண்மையில்,இம்மாதம் முதலாம் திகதி சீனா மேற்படி மின்சக்தி திட்டங்களில் இருந்து பின்வாங்கியிருப்பதாக ஒரு ருவிற்றர் செய்தி கிடைத்தது.மூன்றாவது தரப்பு ஒன்றின் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக அத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக சீனத் தூதரகம் அந்த ருவிற்றர் குறிப்பில் தெரிவித்திருந்தது.ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சீனத் தூதுவர் அது ஒரு போலிச் செய்தி என்று மறுத்திருக்கிறார். தங்களது திட்டத்தை கைவிடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். எனினும் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த மற்றொரு செய்தியில் இலங்கைத் தீவின் பாதுகாப்புத்துறை செயலர் தெரிவித்த ஒரு கருத்துப்படி அந்த மின்சக்தி திட்டங்கள் தொடர்பில் முடிவுகள் இறுதியாக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. அம்மின்சக்தி திட்டங்கள் தொடர்பான செய்திகள் முன்பின் முரணாக வெளிவருவது என்பது அது ஒரு சர்ச்சையாக தொடர்ந்தும் இருப்பதைத்தான் காட்டுகிறது.

மூன்றாவது விவகாரம் தமிழ்மக்களின் உள்வீட்டுப் பிரச்சினை. டெலோ இயக்கம் 13ஆவது திருத்தத்தை ஒரு கொழுக்கியாக பயன்படுத்தி இந்தியாவை உள்ளே கொண்டு வரவேண்டும் என்று ஒரு முயற்சியை முன்னெடுக்கின்றது. ஆனால் தமிழரசுக் கட்சி அதை கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையிலும் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கவில்லை. கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுமந்திரன் அமெரிக்காவை நோக்கி போனார். அமெரிக்காவை கையாள்வதன் மூலம் இந்தியாவை கையாளலாம் என்று அவர் நம்புகிறாரோ தெரியவில்லை.அதேசமயம் டெலோவின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடந்துகொண்டிருந்த அதே காலப்பகுதியில் சீனத் தூதரகம் கூட்டமைப்பை சந்திக்க விரும்பியதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதை சம்பந்தர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. என்ன காரணத்தை கூறி எப்படி மறுத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு தெரியாது.அதுபோலவே சுமந்திரன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு புதுடில்லி கூட்டமைப்பை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. ஆனால் சம்பந்தர் அச்சந்திப்பையும் ஒத்தி வைத்திருக்கிறார். என்ன காரணத்துக்காக ஒத்தி வைத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

இவ்வாறாக சீனத் தூதரகத்தின் அழைப்பை கூட்டமைப்பு கௌரவிக்காத ஒரு பின்னணியில்; புதுடில்லியின் அழைப்பை தமிழரசுக்கட்சி கௌரவிக்காத ஒரு பின்னணியில் சீனத் தூதுவர் வடக்குக்கு வருகை தந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களோடு பேசும்போது “இந்தியாவும் சீனாவும் சிறந்த அயலவர்கள்: சிறந்த நண்பர்கள் ; சிறந்த பங்காளிகள்” என்று கூறியிருக்கிறார். அவர் ஒரு ராஜதந்திரி.அப்படித்தான் கூறுவார். ராஜதந்திரிகள் கூறுவதை ஒன்றில் வார்த்தைகளுக்கு இடையில் இருக்கும் அர்த்தங்களுக்கூடாக விலகிக்கொள்ள வேண்டும்.அல்லது அவர்கள் வெளிப்படையாக கூறுவதை தலைகீழாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அவர் நல்லூரில் அதாவது ஈழத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணத்தின் நடுத்தர வர்க்கச் சைவர்களின் முக்கிய கோவில்களில் ஒன்றாகிய நல்லூரில் வெறும் மேலோடு அர்ச்சனைத் தட்டை கையில் ஏந்தியபடி காட்சி தருவதும் ஒரு ராஜ்ய நகர்வுதான். சீனத் தூதுவர் மட்டுமல்ல யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ராணுவத் தளபதி உட்பட வேறுபலரும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு அதை ஒரு இலகுவான பண்பாட்டு ராஜ்ய நகர்வாக கருதுகிறார்களோ தெரியவில்லை.

எதுவாயினும் சீனா நிவாரணப் பொதியுடன் வடக்கிற்கு வந்திருக்கிறது. நிவாரணத்தோடு வரும் ஒரு நாட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க தேவையில்லை. அதேசமயம் அந்த நிவாரண அரசியலுக்குப் பின்னால் இருக்கும் ராஜதந்திர இலக்குகளை குறித்து தமிழ்மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அந்த ராஜிய நகர்வு ஒரு விடயத்தை உணர்த்துகிறது. சீனா தமிழ் மக்களை ஏதோ ஒரு விதத்தில் அணுக முயற்சிக்கிறது என்பதே அது.

ஏற்கனவே சுமந்திரனின் தூதுக்குழு அமெரிக்காவுக்கு சென்று திரும்பி இருக்கிறது. இந்தியா கூட்டமைப்பை டெல்லிக்கு வருமாறு கேட்டிருக்கிறது. இப்பொழுது சீனா யாழ்ப்பாணத்துக்கு நிவாரணத்தோடு வந்திருக்கிறது. இவை தமிழ் மக்களின் பேர வாய்ப்புகள் உயர்வதை காட்டுகின்றனவா?

ஏனெனில் இலங்கை தீவை கையாள முற்படும் எல்லா பேரரசுகளும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் கையாண்டு வருகின்றன. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுக்கூடாக அவை கொழும்பிலுள்ள அரசைத்தான் கையாள்வதுண்டு.கொழும்பை கையாள முடியாத போது தமிழ் மக்களை கையாண்டு அதன்மூலம் கொழும்பை வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பார்கள்.கடந்த சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலான இனப்பிரச்சினையின் அரசியல் அப்படித்தான் காணப்படுகிறது.

சீனா, ராஜபக்சக்களிடம் பெற்ற அனுகூலம் எனப்படுவதும் ஒருவிதத்தில் இனப்பிரச்சினையின் மறைமுக விளைவுதான். கடந்த ஐநா தீர்மானத்தின் போது சீனா திட்டவட்டமாக இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நின்றது. அது மட்டுமல்ல,அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தின் கடுமையை குறைப்பதற்கும் சீனா பாடுபட்டது. கடந்த மார்ச் மாத ஐநா கூட்டத் தொடருக்கு சில மாதங்களுக்கு முன்னரே கொழும்புக்கு வருகை தந்த சீனப் பிரதானிகள் ஐநாவில் சீனா அரசாங்கத்தின் பக்கம் நிற்கும் என்பதனை துலக்கமாக தெரிவித்திருந்தார்கள்.

எனவே இன்றுவரையிலுமான சீன அணுகுமுறைகளை தொகுத்துப்பார்த்தால் சீனா இனப்பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி இச்சிறிய தீவில் தனக்கு வேண்டியவற்றை பெற்றிருக்கிறது. ஆனால் இந்த ராஜ்ய அணுகுமுறையில் சீனா என்றைக்குமே வெளிப்படையாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் பக்கம் நின்றதில்லை.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களோடு கதைக்கும்பொழுது சீனத் தூதுவர் இனப்பிரச்சினை நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த உள்நாட்டு விவகாரத்திற்கு சீனா ஆயுதங்களை வழங்கியது. ராஜதந்திர உதவிகளை வழங்கியது. தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. 2009க்குப்பின்னிருந்து சீனா ஐநாவில் அரசாங்கத்தின் பக்கமே நிற்கிறது. எனவே இனப்பிரச்சினையில் சீனா திட்டவட்டமாக ஒரு பக்கம்தான் நிற்கிறது. நிச்சயமாக தமிழ் மக்களின் பக்கம் நிற்கவில்லை.

தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாள வேண்டிய தேவை சீனாவுக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டாலும் தமிழ் மக்களை நெருங்கி வந்து கையாளத் தேவையான பண்பாட்டு இணைப்போ,,மொழிப் பிணைப்போ, புவியியல் அருகாமையோ சீனாவுக்கு இல்லை. மேலும் மேற்கு நாடுகளில் பலமடைந்து காணப்படும் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ற காரணியும் சீனாவில் இல்லை.எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் மக்களை கையாள வேண்டிய தேவையும் சீனாவுக்கு குறைவு.கையாளத் தேவையான வாய்ப்புகளும் சீனாவுக்கு குறைவு.அதேசமயம் இனப் பிரச்சினையின் காரணமாக சீனாவை நோக்கித் திரும்பிய ராஜபக்சக்களை சீனா தனது வியூகத்தின் பங்காளிகள் ஆக்கிக்கொண்டது என்பதே சரி.

இப்படிப்பட்டதோர் பின்னணியில் இந்தியாவை நம்பத் தயாரற்ற தமிழ் விமர்சகர்கள் சிலர் சீனாவையும் தமிழர்கள் ஒரு பேர வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று எழுதுவதுண்டு. எனினும், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தரப்பில் இருந்து யாரும் சீனாவை அவ்வாறு அணுகுவதற்கு எத்தனிக்க வில்லை.

இப்பொழுது சீனத் தூதுவர் நல்லூரில் வேட்டி கட்டிக்கொண்டு வெறும் மேலோடு அர்ச்சனைத் தட்டுடன் வந்து நிற்கிறார். இந்தப் பண்பாட்டு தோற்றம் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லப் போதாது. ஏனெனில் மாவோ சேதுங் கூறியதுபோல அரசியல் அதிகாரம் எனப்படுவது சீனா, இலங்கை அரசுக்கு வழங்கிய துப்பாக்கி முனையில் இருந்தே பிறக்கிறது.நிச்சயமாக அர்ச்சனைத் தட்டுக்களிலிருந்து அல்ல.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More