Home இலங்கை 1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பில் ஆராய விசேட குழு

1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பில் ஆராய விசேட குழு

by admin

(க.கிஷாந்தன்)

1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு தொழில் ஆணையாளரை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுள்ளார்.


நுவரெலியா – லபுக்கலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை ஒன்று நேற்று (18.12.2021) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொழில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…


‘கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளப்படாமைக்கு தொழிற்சங்களும், முதலாளிமார் சம்மேளனமும் உடன்படவில்லை. அதற்கான பொறுப்பை அந்த இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்படவில்லை. அதனால் அந்த உத்தரவை செயற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் கட்டுப்பட்டுள்ளது. அதற்கமைய 90 வீதமான தோட்டங்களில் 1000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் சில தோட்டங்களில் பல்வேறு பிரச்சினைகளை தொழிலாளர்களுக்கு சந்தித்து வருவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதாவது 1000 ரூபாவை பெற வேண்டுமானால் இவ்வளவு கிலோ கொழுந்தை பறிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.


எனவே தொடரும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் தற்போது புள்ளி விபரங்களை சேகரித்து வருகின்றோம். ஆகவே 1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆராய விசேட ஆணையாளர் ஒருவரை நியமிக்குமாறு தொழில் ஆணையாளரை கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். அதனூடாக தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம். அதேபோல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்பார்த்துள்ளோம்.


அதனூடாக தேவைப்படின் விசேட சட்டமூலம் ஒன்றையும் பாராளுமன்றத்தில் கொண்டுவர எதிர்பார்க்கின்றோர். அந்த சட்டமூலத்தின் ஊடாக 1000 ரூபா சம்பள உயர்வையும் அதனை முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்தும் ஆராய்ந்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்க்கின்றோம். அவை நீதிமன்ற தீர்ப்பிற்கமையவே செயற்படுத்தப்படும்.


தற்போது தேயிலைத் தோட்டங்கள் உரிய முறையில் பராமறிக்கப்படுவதில்லை. அதேபோல் பெருந்தோட்ட பொருளாதாரத்தை சக்திமயப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நாம் புதியதொரு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளோம். அதாவது தரிசு நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் வகையிலான சட்டமூலம். அதற்கமைய தேயிலை, இறப்பர் உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவற்று அபிவிருத்தி செய்ய மேலும் 6 மதகால அவகாசம் வழங்கப்படும். அப்படியும் அவற்றை அபிவிருத்தி செய்ய தவறினால் அதனை அரசாங்கம் பொறுப்பேற்றறு அபிவிருத்தி செய்ய கூடிய இயலுமை உள்ளவர்களுக்கு வழங்கும். அதாவது பெருந்தோட்ட மக்களுக்கு மாடு வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்ய அது வழங்கப்படும். அதாவது அந்த காணி சொந்தமாக வழங்கப்படாது மாறான அதன் பலனை பெற்றுக்கொள்ள வழங்கப்படும்.’ என்றார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More