பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக இன்று விசாரணைக்கு முன்னிலைகுமாறு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமுலாக்கத்துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பதற்காக, பிரிட்டீஷ் வர்ஜின் தீவுகளில் இல்லாத போலி கம்பெனிகள் பெயரில் முதலீடுசெய்தவர்களின் பட்டியல் கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
உலக அளவிலான குற்றப்புலனாய்வு செய்தி ஊடகங்கள் சேர்ந்து நடத்திய பெரும் புலனாய்வில், இந்த வரி ஏய்ப்பு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இந்த முறையில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அந்தப் புலனாய்வுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களில் ஐஸ்வர்யா ராய் முக்கியமானவர். இவர் உள்பட 500 இந்தியர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஏற்கெனவே அவருக்கு இரண்டு முறை அமுலாக்கத் துறையின் சார்பில் விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டது. அமிக் பங்குதாரர்கள் எனும் பெயரிலான நிறுவனத்தில், ஐஸ்வர்யா, அவரின் தந்தை, தாய், சகோதரர் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முந்தைய இரண்டு அழைப்பாணைகளுக்கும் ஐஸ்வர்யா. அவகாசம் கேட்டு பதில் அளித்திருந்தார்,
இந்தநிலையில் இன்றைய விசாரணைக்கு அவர் முன்னிலையாவாரா , மாட்டாரா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவுசெய்யப்படும் என அமுலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.